டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை; மன்னார்குடியில் 700 ஏக்கர் பருத்தி, எள், நெற்பயிர் சேதம்

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக நேற்றும் மழை பெய்தது. மன்னார்குடியில் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, எள், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது. வெள்ளப்பெருக்கால் துறையூர் பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இது மேலும் வலுவடைந்து நேற்று தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்றிரவு 8 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. விடிய விடிய சாரல் மழை பெய்தது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளில் மாலை 4 மணிக்கு பலத்த மழை பொழிந்தது. அரியலூரில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை விட்டு மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்று மதியம் 2 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் துவங்கிய மழை, மாலை 5 மணி வரை கொட்டியது. திருச்சியில் நேற்றிரவு சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டத்தில் திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, பைங்காநாடு, வடபாதிமங்கலம், வல்லூர், திருமேனிஏரி கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் மூலம் கோடை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர் தொடர் மழையால் சாய்ந்து சேதமடைந்தது. இதேபோல் 500 ஏக்கர் பருத்தி, 100 ஏக்கர் எள் பயிர்களில் மழை தண்ணீர் ேதங்கியதால் பயிர்கள் சேதமடைந்தது. நாகையில் நேற்று மழை இல்லை. இருப்பினும் கடல் சீற்றம் காரணமாக 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் இன்று 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1300 படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலையில் டாப் செங்காட்டுப்பட்டியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மங்களம் அருவி உள்ளது. சேலம், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் இந்த அருவிக்கு வருவார்கள். பச்சமலையில் பெய்த மழை காரணமாக மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்களம் அருவிக்கு பொதுமக்கள் வருவதற்கும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

The post டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை; மன்னார்குடியில் 700 ஏக்கர் பருத்தி, எள், நெற்பயிர் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: