மனஉறுதிதான் வெற்றிக்கான தேவை!

மனஉறுதி என்பது ஒரு வலிமையான மனோபலம். மனஉறுதியால்தான் பலமுறை தோற்ற பின்பும் வெற்றியை விரட்டிப் பிடித்தார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற காந்தியடிகளின் மனஉறுதிதான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது. ஆராய்ச்சி கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒரு போதும் கைவிடமாட்டேன் எனும் மன உறுதிதான் தாமஸ் ஆல்வா எடிசனை 1600 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. என்றாவது ஒருநாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மிதிப்பேன் எனும் மனஉறுதிதான் டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது.

தங்கள் இலக்கின் மீது கொண்டிருந்த மனஉறுதிதான் சாதாரண மனிதர்கள் பலரை சாதனைச் சிகரத்தில் அமரச்செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மனஉறுதியால் மரணத்தையே தள்ளிப்போடலாம் என்று சாதித்துக்காட்டியவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.இரண்டே வருடத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹக்கிங்ஸ் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார் என்றால் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தன் மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டு இருந்ததே, அப்படி இளம் வயதிலே தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீண்டு மனஉறுதியின் மூலமாக தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று சாதித்தவர் தான் ஷிவானி சாரக்.
ஜம்முவை சேர்ந்த18 வயதான ஷிவானி, இந்தியாவின் முன்னணி ஏறுதல் விளையாட்டு (ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங்) வீராங்கனையாக பல தடைகளை தாண்டி சிகரங்களை அடைந்து சாதித்துள்ளார். ஜம்முவில் பிறந்து வளர்ந்த ஷிவானிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர்.

பள்ளியில் டேக்வாண்டோ பயிற்சி பெற்றாலும் அதில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கவில்லை. 2009ல் ஷிவானிக்கு 9 வயதாக இருந்த போது சோதனை ஆரம்பமானது.அன்றைய தினம் புத்தாண்டு மற்றும் அவருடைய சகோதரர் பிறந்தநாள் குடும்பமே கொண்டாட்டத்தில் இருந்த போது, ஷிவானிக்கு தாங்க முடியாத கடும் வயிற்று வலி ஏற்பட்டது.அவர் அழுவதை பார்த்த சகோதரி பதறியடித்து அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.அதன் பிறகு டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.டாக்டர் மேல் சிகிச்சைக்கு சண்டிகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.அங்கு தீவிர பரிசோதனைகளுக்கு பிறகு ஷிவானிக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.குடும்பமே துயரத்தில் ஆழ்ந்தது.தனக்கு புற்றுநோய் இருப்பதை கேள்விப்பட்ட ஷிவானி மிகுந்த வேதனை அடைந்தார்.இருந்த போதும் சிகிச்சைகள் மூலமாக நோயிலிருந்து மீண்டு விடலாம் என்று அவருடைய தந்தை ஆறுதல் அளித்தார். அதன் பிறகு சிகிச்சையும் துவங்கியது.

மருத்துவமனையில் தனது மகளின் நிலையைப் பார்த்து பெற்றோர் அழுவதை பார்த்து தாங்க முடியாமல் ஷிவானியும் அழுது விடுவார்.இதனால் ஒரு முடிவுக்கு வந்தார் தனது தாய் தந்தை மனம் வருந்தாமல் இருக்க வேண்டும் என்றால் மனஉறுதியுடன் நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்ற வலுவான நம்பிக்கையுடன் இருக்க முயற்சித்தார்.அதுமட்டுமல்ல புற்றுநோயால்பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அவரை சுற்றி இருந்தனர்.அவர்களும் குணமாக வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்தார். தலைமுடி உதிர்வது உள்ளிட்ட விளைவுகளையும் எதிர்கொண்டார்.இத்தகைய தருணங்கள் மிகுந்த சோதனை காலமாக அமைந்தது ஷிவானிக்கு, இருந்தபோதும் மனம் தளரவில்லை.நோயிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்தது.நம்பிக்கையின் பலனால் மனஉறுதியால் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு 2012ல் அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது.ஷிவானி பள்ளிக்கு செல்லத் துவங்கினார்.பள்ளியில் படிக்கும் போது ஏறுதல் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.இது ஒரு கடினமான விளையாட்டாகும்.மலைப்பாறையில் பாதுகாப்பிற்காக ஆங்கர்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அதிருந்து ஒரு கயிறு ஏறுபவர் மீதும் பொருத்தப்பட்டிருக்கும்.அதன் பிறகு சுவர் மீது ஏற வேண்டும்.முதன் முதலாக அவர் பள்ளியில் உள்ள 4 மீட்டர் சுவரில் ஏறத்துவங்கினார்.துவக்கத்தில் அவரது உடல் நிலை தடையாக இருந்தாலும்,டாக்டர் அனுமதி கொடுத்தால் தொடர்ந்து இதில் ஈடுபடலாம் என அவரது தந்தை ஊக்கம் அளித்தார்.ஷிவானி பலவீனமாக இருந்ததால் இது எளிதாக இல்லை.தனது சகோதரர்கள் உதவியை நாடினார்.தொடர் பயிற்சியால் அடுத்த ஓராண்டில் ஷிவானி இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபடத்துவங்கினார்.

மெல்ல மெல்ல ஷிவானி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்றார்.ஜம்மூவில் ஏறுதல் விளையாட்டிற்கு சரியான பயிற்சிகள் கிடைக்கவில்லை. அதனால் பல சவால்களை அவர் எதிர்கொண்டார்.உள்ளூரில் பயிற்சி எடுக்க மிகவும்சிரமப்பட்டார்,ஒரு ஏறும் சுவர் தவிர, ஷிவானிக்கு போதிய பயிற்சி வசதிகள் ஜம்முவில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் ஏறுதல் விளையாட்டில் தொடர் வெற்றி பெற்றதன் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் மூலமாக பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்.

சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தினமும் ஏறுதல் விளையாட்டுக்கான பயிற்சியுடன்,கடுமையான உடற்பயிற்சியும் செய்தார்.அதன் பலனால்பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.2015 ஆம் ஆண்டு தேசிய போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றார்.2016ல் உலகக் கோப்பையில் பங்கேற்றார்.ஜம்முவில் உள்ளூரில் நடைபெற்ற போட்டி முதல் சர்வதேச போட்டி வரை வென்று சாதித்து உள்ளார்.ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதிக்க வேண்டும் என்பதே தன்னுடைய உயர்ந்த இலக்காக கொண்டு உள்ளார் ஷிவானி.

பெண்விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வெல்ஸ்பனின் சூப்பர் ஸ்போர்ட்ஸ்வுமன் திட்டம் இப்போது ஷிவானியை ஆதரித்து வருகிறது.இந்தத் திட்டத்தின் ஆதரவு காரணமாக ஷிவானி பல போட்டிகளில் பங்கேற்று,மேலும் பல வீராங்கனைகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் சர்வதேச பயிற்சியும் பெற்றுள்ளார்.இளம்வயதில் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் மனஉறுதியால் அந்த நோயை வென்று புதுமையான ஏறுதல் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய அளவில் சாதித்து வருகிறார் ஷிவானி.மனஉறுதிதான் வெற்றிக்கான முதல் தேவை என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

The post மனஉறுதிதான் வெற்றிக்கான தேவை! appeared first on Dinakaran.

Related Stories: