பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய விவகாரம் பிரபல பாலியல் ஏஜென்ட்டை பிடிக்க ஐதராபாத் விரைந்தது தனிப்படை

* தனித்தனியாக விமானம் மூலம் 30க்கும் மேற்பட்ட சிறுமிகளை அழைத்து சென்றது அம்பலம்
* வயதான விஐபிக்களுக்கு விருந்தாக்கிய கொடுமை

சென்னை: பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் பிரபல பாலியல் புரோக்கரை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத்திற்கு விரைந்துள்ளனர். வழக்கில் கைதான நதியா சென்னையில் இருந்து விமானம் மூலம் 30 சிறுமிகளை தனித்தனியாக அழைத்து சென்று வயதான விஐபிக்களுக்கு விருந்தாக்கியதும் விசாரணை மூலம் அம்பலமாகி உள்ளது. சென்னை ஆளுநர் மாளிகை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. அப்போது சிறையில் இருந்த ரவுடி கருக்கா வினோத்தை தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த அவரது தோழியான நதியா (37) பல லட்சம் செலவு செய்து ஜாமீனில் எடுத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நதியாவுக்கும் ரவுடி கருக்கா வினோத்திற்கும் இடையேயான விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்த போது, நதியா செய்து வந்த பாலியல் தொழிலுக்கு ரவுடி கருக்கா வினோத் முழு பாதுகாப்பு அளித்து வந்தது தெரியவந்தது.

உடனே என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் ரவுடி கருக்கா வினோத்தின் நெருங்கிய தோழியான நதியா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நதியா பயன்படுத்திய 5 செல்போன்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு என்ஐஏ அதிகாரிகள் பள்ளி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் என்பதால், இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தி, பிரபல பெண் பாலியல் புரோக்கரான நதியா (39), அவரது சகோதரி சுமதி (43), தங்கை சூர்யாவின் கணவர் ராமச்சந்திரன் (42), நேபாள நாட்டை சேர்ந்த மாய ஒலி (29) மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த கோவையை சேர்ந்த அசோக்குமார் (31), மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்த ரமணிதரன் (70), தி.நகரில் சர்வீஸ் குடியிருப்பு ேமலாளரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி (36), செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த பாலியல் ஏஜென்ட் விஜயலட்சுமி (51), நதியாவின் தங்கை சூர்யா ஆகிய 9 பேரை கடந்த மே மாதம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய போது, ‘பாலியல் புரோக்கர் நதியா 11ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொடுத்து பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்தது தெரியவந்தது. மேலும், நதியாவின் மகள் பள்ளி முடிந்ததும் தி.நகர் கண்ணம்மாபேட்ைடயில் ‘டான்ஸ் கிளாஸ்’ சென்று வந்தார்.

அப்போது டான்ஸ் கிளாஸ் வரும் சிறுமிகளுடன் அவர், ‘ரீல்ஸ்’ செய்து அவர்களையும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதில் பள்ளி சிறுமிகள் சிக்கி, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் நல அமைப்புகள் வாயிலாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.கைதான நதியா, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அடிக்கடி தனது மகளுடன் படிக்கும் பள்ளி மாணவிகள் மற்றும் தி.நகர் கண்ணாமாபேட்டையில் உள்ள டான்ஸ் கிளாசுக்கு வரும் சிறுமிகளையும் விமானம் மூலம் அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள பிரபல பாலியல் புரோக்கர் கேட்கும் சிறுமிகளை ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் மூலம் 70 ஆயிரத்திற்கு விலை பேசி விமானம் மூலம் நதியா அழைத்து சென்று வந்துள்ளார். அதன்படி ஐதராபாத்திற்கு 30க்கும் மேற்பட்ட சிறுமிகளை நதியா அழைத்து சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல பாலியல் ஏஜென்ட் மற்றும் சிறுமிகளை சீரழித்த வயதான விஐபிக்களை தெலங்கானா போலீசார் உதவியுடன் கைது ெசய்ய விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை ஒன்று நேற்று முன்தினம் ஐதராபாத் விரைந்துள்ளது.

* புரோக்கர்களுடன் தொடர்பில் இருந்தால் ‘சஸ்பெண்ட்: கூடுதல் கமிஷனர் ராதிகா எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் எல்லையில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி பாலியல் குற்றவாளிகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விபச்சார தடுப்பு பிரிவில் பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளிகளாக உள்ள 150க்கும் மேற்பட்ட பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜென்ட்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கமிஷனரின் உத்தரவை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, விபச்சார தடுப்பு பிரிவுக்கு கடந்த 10ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி, 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், என விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றும் 25க்கும் மேற்பட்ட போலீசாரிடம் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பல ஆண்டுகளாக பாலியல் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள புரோக்கர்கள், ஏஜென்ட்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள், வழக்கறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் யாரேனும் இருந்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து ரகசியமாக தோழிலில் ஈடுபடுவது குறித்து எனது கவனத்திற்கு தெரியவந்தாலோ, ‘அவர்களை டிரான்ஸ்பர் செய்ய மாட்டேன். மாறாக, நேரடியாக ‘சஸ்பெண்ட் தான்’ செய்வேன் என எச்சரித்துள்ளார்.

The post பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய விவகாரம் பிரபல பாலியல் ஏஜென்ட்டை பிடிக்க ஐதராபாத் விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: