அகமதாபாத்தில் இன்று மோதல்..! டெல்லியை சமாளிக்குமா பெங்களூரு?

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் டி20 தொடரின் 22வது போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகிறது. விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியும் நடப்பு தொடரில் இதுவரை தலா 5 போட்டிகளில் ஆடியுள்ளன. இரு அணிகளுமே தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 8 புள்ளிகளை பெற்றுள்ளன. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் வீரர்கள், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளனர்.

டெல்லி அணி இதற்கு முந்தைய போட்டியில், தட்டுத் தடுமாறி சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வென்றது. வெற்றியை தக்க வைக்கும் நோக்கில் டெல்லி வீரர்கள், இன்று பெங்களூருவை எதிர்கொள்கின்றனர். இரு அணிகளிலுமே ஓபனர்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர். டெல்லி அணியின் ஓபனர்களில் ஷிகர் தவான், இத்தொடரில் 5 போட்டிகளில் 259 ரன்களை குவித்துள்ளார். பெங்களூரு அணியின் ஓபனர் படிக்கல் 4 போட்டிகளில் 171 ரன்களை விளாசியுள்ளார். பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் படிக்கல், மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமத் என வலுவான பேட்ஸ்மேன்கள் மிரட்டுகின்றனர். டெல்லி அணியில் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பன்ட், ஸ்டோனிஸ், ஹெட்மேயர் மற்றும் ரஹானே என சர்வதேச போட்டிகளில் ஜொலித்து வரும் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர்.

இரு அணிகளின் பந்து வீச்சும் இதே போல் சமநிலையில் உள்ளன. டெல்லி அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்காலிகமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் ரபாடா, அக்சர் படேல், அவேஷ் கான், அமித் மிஸ்ரா மற்றும் ஸ்டோனிஸ் என திறமையான பவுலர்கள் துடிப்புடன் இறங்க உள்ளனர். பெங்களூரு அணியில் சிராஜ், ஜேமிசன், சாஹல், நவ்தீப் சைனி, கிறிஸ்டியன், ஹர்ஷல் படேல் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தரும் பவுலிங்கில் கை கொடுக்க உள்ளார். தராசு தட்டில் வைத்தால் இரு அணிகளுமே முற்றிலும் சமமான நிலையில் உள்ளன என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்றே முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: