சேலத்தில் பரபரப்பு காதல் திருமணம் செய்த 10 நாளில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை

*மனைவியின் அந்தரங்க படத்தை வெளியிடுவதாக சொன்னதால் தீர்த்துக்கட்டினர்

*3 பேரை பிடித்து விசாரணை

சேலம் : சேலத்தில் காதல் திருமணம் செய்த 10 நாளில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அவரது மனைவியின் உறவினர்கள் 3 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகில், பெருமாள் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது.

இது குறித்த தகவலின் பேரில், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தம் போடாமல் இருக்க, வாயில் துணியை திணித்து கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. சடலமாக கிடந்த வாலிபரின் பேன்ட் பாக்கெட்டில், ஆம்பூரில் இருந்து சேலத்திற்கு வந்த ரயில் டிக்கெட் இருந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய், மீண்டும் திரும்பி அங்கேயே வந்து நின்று விட்டது. தடய அறிவியல் நிபுணர்கள், தடயங்கள் மற்றும் கைரேகைகள் சேகரித்தனர்.

பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அன்னதானப்பட்டி போலீசில், லைன்மேட்டை சேர்ந்த சையத் சசி என்பவர், தனது மகன் முபாரக் (22)கை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து, அவரிடம் கொலையான வாலிபரின் சடலத்தை போலீசார் காண்பித்த போது, அவர் முபாரக் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முபாரக்(22), இவர் 8வது வரை படித்து விட்டு, மூணாங்கரட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது, உடன் வேலை செய்த லைன்மேட்டை சேர்ந்த அக்பர்அலியின் மகள் ஷஜினாபானு(21) உடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, ஷஜினாபானு கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது முபாரக், தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஷஜினாபானுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், முபாரக்கை பேச வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்லவில்லை. நேற்று முன்தினம், முபாரக் ஆம்பூருக்கு ரயிலில் சென்று விட்டு, மீண்டும் சேலத்துக்கு மாலையில் திரும்பி வந்துள்ளார். இதையறிந்த ஷஜினாபானுவின் உறவினர்கள் 3 பேர், முபாரக்கை பைக்கில் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே அழைத்துச்சென்று பேசியுள்ளனர்.

அப்போது, ஷஜினா பானுவின் அந்தரங்க படத்தை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த ஷஜினாபானுவின் உறவினர்கள், முபாரக்கை கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும், கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதை தொடர்ந்து, முபாரக்கின் மனைவி ஷஜினாபானு மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து 10 நாளில், புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலத்தில் பரபரப்பு காதல் திருமணம் செய்த 10 நாளில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: