திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.68 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் சோலைஹால் சாலையில் உள்ள நெட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர், திண்டுக்கல் மாநகராட்சி கணக்கு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இப்பிரிவில் குடிநீர், சொத்து, பாதாளச் சாக்கடை, வாடகை இனங்களின் வரி வசூல் செய்யப்படுகிறது. வசூலாகும் தொகையை மறுநாள் காலை வங்கி கணக்கில் செலுத்துவர். இப்பணியில் ஈடுபட்டிருந்த சரவணன், வசூலான வரி தொகையை வங்கியில் செலுத்தியது போன்று போலி சலான் தயாரித்து ரூ.4.68 கோடி மோசடியில் ஈடுபட்டது கணக்கு தணிக்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நிதிப்பிரிவில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் சதீஷ், இவர்களை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சரவணனை கைது செய்தனர்.
The post ரூ.4.68 கோடி முறைகேடு விவகாரம் திண்டுக்கல் மாநகராட்சியின் இளநிலை உதவியாளர் கைது appeared first on Dinakaran.