அரசு பள்ளிக்கு செல்லும் வழியை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

*மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை

வந்தவாசி : வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாற்று வழியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி நெடுஞ்சாலை துறை சார்பில் ₹2.80 கோடி மதிப்பீட்டில் காமராஜர் சிலையில் இருந்து புதிய பஸ் நிலையம் இணைப்பு சாலை வரை பஜார் வீதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளன. இதற்காக தாலுகா அலுவலகம் சாலை சந்திப்பு, அச்சரப்பாக்கம் சாலை சந்திப்பு, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.

மேலும், புதிய பஸ் நிலையம் இணைப்பு பகுதியில் உள்ள சுகநதி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே உள்ள சிறு பாலம் ஒட்டியவாறு இரண்டு பகுதிகளிலும் சுமார் 8 அடி அகலத்திற்கு சிறு பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மெயின் கேட் முன்பாக சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் பள்ளி மாணவிகள் சன்னதி தெருவில் உள்ள சிறு வழியாகவும், அதேபோல் நாவிதர் தெரு உள்ள சிறிய வழியாகவும் பள்ளிக்கு வருகின்றனர்.

அதிகமான மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சிறு வழியைக்கொண்டு உள்ளே சென்று வருவதால் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. மேலும், சன்னதி தெருவில் உள்ள வழியில் பொதுமக்கள் அசுத்தம் செய்வதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியை பள்ளி மாணவிகள் கடக்கும்போது மூக்கை பிடித்து கொண்டு பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் தினந்தோறும் குப்பைகளை அகற்றி அங்கு சுண்ணாம்பு பவுடர் தெளித்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரசு பள்ளிக்கு செல்லும் வழியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: