ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 15ம் ஆண்டு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசு

சென்னை: ஆர்எம்கே பொறியியல் கல்லூரியினன் 15வது ஆண்டு விழாவில், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவள்ளூர் புதுவாயலில் உள்ள ஆர்எம்கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 15வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு கல்லூரி நிறுவனரும், தலைவருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர் முன்னிலை வகித்தார். முதல்வர் சு.ராமர் வரவேற்றார். இயந்திரவியல் துறைத்தலைவர் மா.பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

விழாவில் கல்லூரி நிறுவனரும், தலைவருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசும்போது, ‘‘நமது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.10 லட்சம் வருமானம் தரக்கூடிய வேலையை பெறவேண்டும். இந்த கல்லூரி கடந்த ஆண்டுகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசைப் பட்டியலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியதுடன் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்கி வருகிறது’’ என்றார்.

விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான ரொக்கப் பரிசுகள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி வாழ்த்திப் பேசினார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், கடின உழைப்பும் கொண்டு மேன்மை அடைய வேண்டும். பெற்றோரை மதித்து நடப்பதும், ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி வாழ்தலுமே ஒருவரை மேலான நிலைக்கு எடுத்துச் செல்லும்’’ என்றார். நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆலோசகர்கள் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிச்சாண்டி, மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் கங்காதரன் நன்றி கூறினார்.

The post ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 15ம் ஆண்டு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: