நவி மும்பை தமிழ் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

சென்னை: வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்க கட்டிட புனரமைப்புக்கென இதுவரை ₹1 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நவி மும்பை தமிழ் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழ்மொழியை கற்பதால் அவர்கள் அடையக் கூடிய நன்மைகள் யாவை? என்பதையும் ஆசிரியர்கள் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதற்கான போதிய பயிற்சிகளை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான பாட புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தரவேண்டும்.

தமிழ்நாடு அரசு இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அம்மாநிலங்களில் தமிழ் பண்பாட்டை பரப்பிடும் வகையில் தமிழ் அமைப்பு, தமிழ் சங்கங்கள் நிறுவி செயற்படுத்தி வருபவர்களின் தமிழ் உணர்வை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கோரிக்கையின் அடிப்படையில், நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், மும்பை தமிழ் சங்கம், புவனேஸ்வர் தமிழ் சங்கம், திருவனந்தபுரம் தமிழ் சங்கம், பெங்களூர் தமிழ் சங்கம், கர்நாடக தமிழ் உயர்நிலைப்பள்ளி, ஹுப்ளி, சண்டிகர் தமிழ் மன்றம், கல்கத்தா பாரதி தமிழ் சங்கம், ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்கி உள்ளது.

நவி மும்பை தமிழ்ச் சங்க கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கென இதுவரை ₹1.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவி மும்பை தமிழ் சங்கம் தொடர்ந்து சிறப்புடன் செயற்பட நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post நவி மும்பை தமிழ் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: