ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் குறைந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெவித்தனர். தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக மின் வாரியம் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து மத்திய தொகுப்பு மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்த தினசரி மின்தேவை இந்தாண்டு 20 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேவையை பூர்த்தி செய்து தடையின்றி மின்சாரம் விநியோகிக்க வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்ய கடந்த மாதம் மின் வாரியம் டெண்டர் கோரியது. அதில் ஏப்.1 முதல் மே.31 வரை தினமும் அதிகப்படியான மின் பயன்பாடு இருக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12மணி வரை(பீக் ஹவர்ஸ்) தேவைப்படும் மின்சாரமும், மற்ற நேரங்களில் தேவையான மின்சாரமும் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.

இந்த ஆண்டு கோடை வெயிலுடன், நாடாளுமன்ற தேர்தலும் வருவதால் மார்ச் முதல் மே வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், ஏப்ரல் மாதம் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டே டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு புதிய சிக்கலாக ஒன்றிய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மத்திய தொகுப்பு மின்சாரம் குறைவாகவே தரப்படுவதால் தேவையை பூர்த்தி செய்வதில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: ஒன்றிய அரசின் அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 7,170 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையங்களில் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால் தினமும் சராசரியாக, 5,000 முதல் 5,500 மெகா வாட் மின்சாரம் தான் வழங்கப்படும். தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மத்திய மின்சாரத்தின் பங்கும் உள்ளது.

தற்போது, எரிபொருள் நிரப்பும் பணிக்காக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகாவாட்டும், பழுது காரணமாக 1,000 மெகாவாட்டும், என்எல்சி அனல் மின் நிலையத்தில் 910 மெகாவாட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களாக, ஒன்றிய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு, 4,000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான, 4,320 மெகாவாட் திறனுடைய 5 அனல் மின் நிலையங்களில், 4,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 16,500 மெகாவாட் வரை மின் நுகர்வு உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு, மின் உற்பத்தி நிறுத்தும் விபரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் வல்லூர் மின் நிலையத்தில், இரு அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளதால், அங்கு விரைந்து மின் உற்பத்தி துவக்கவும், வரும் நாட்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண அதன் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: