இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 967 ஆனது. இதில் ஒருவரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 3,09,841 பேர், பெண்கள் 4,84,074 பேர், 3ம் பாலினத்தவர் 51 பேர் அடங்குவர்.
இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 2763 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை கண்காணிக்க ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 2763 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதை தவிர்த்து கண்காணிப்பாளர்கள், சோதனை நடத்துபவர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படையினர் என தேர்வு பணி, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், ராயப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 251 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 75,185 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர்.
தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் துணை கலெக்டர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையை பொறுத்தவரை சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் மூத்த ஐஏஎஸ் அதிகரி எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் வரை தான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் ஒரு பதவிக்கு 150 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குரூப் 2 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
* கவர்னர் தொடர்பான கேள்வி
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை எழுதி விட்டு வந்த மாணவர்கள், “வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், வினாக்களுக்கு சிந்தித்து பதில் அளிப்பதற்கு நேரமும் போதவில்லை” என்றனர். மேலும் வினாக்களில், கூற்று சரி, தவறு என்பது தொடர்பாக கவர்னர் பற்றிய ஒரு வினாவும் இடம் பெற்று இருந்தது. அதில், ‘’இந்திய கூட்டாட்சியில் கவர்னர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி எனும் இருவிதமான பணிகளை செய்கிறார். கவர்னர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது’’ என வினா இடம் பெற்றிருந்தது. இதேபோல், அண்ணா, பெரியார் பற்றிய வினாக்களும் இடம்பெற்றிருந்தன.
* 2.12 லட்சம் பேர் ஆப்ெசன்ட்
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93,966 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தேர்வை 73.22% பேர் எழுதியுள்ளனர். அதாவது, 5 லட்சத்து 81, 305 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 26.78% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 2 லட்சத்து 12,661 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
* ‘தினகரன்’ நாளிதழில் வெளிவந்த மாதிரி வினா விடையில் இருந்து குரூப் 2, 2ஏ தேர்வில் 80% கேள்வி: வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 75,185 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வுகளை எழுதுபவர்கள் பல்வேறு புத்தகங்களை படித்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பலர் பல்வேறு பயிற்சி மையங்களில் இதற்கென பிரேத்யகமாக வழங்கப்படும் வகுப்புகளில் பயிற்சி எடுத்து எழுதி வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டும் வகையில் தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு நாளும் பொது அறிவு உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வுக்கான மாதிரி வினா விடைகளை வெளியிட்டு வருகின்றனர். வாசகர்கள் உள்பட தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் இந்த மாதிரி வினா விடைகளை தினந்தோறும் படித்து வருகின்றனர். எளிதான நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் மாதிரி வினா விடை வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்வின் போதும் அதற்கு ஏற்ற வகையில் மாதிரி வினா விடை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நடந்த குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கும், கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து மாதிரி வினாவிடை வெளியிடப்பட்டு வந்தது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில், நேற்று நடந்த தேர்வில் தினகரன் நாளிதழில் வெளியிட்ட பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகளில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் 80 சதவீதத்துக்கும் மேலான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினகரன் நாளிதழ் வெளியிட்ட மாதிரி வினா விடை பகுதிக்கு வாசகர்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகுபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சிறப்பாக தயார் செய்து மாதிரி வினா விடைகளை வெளியிடும் தினகரன் நாளிதழுக்கு நன்றி என பலர் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர்.
The post 2327 பதவிக்கு குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 5.81 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 250 பேர் போட்டி; தேர்வு மையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு appeared first on Dinakaran.