பாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 2 அபூர்வ குரங்குகள் பறிமுதல்: சென்னை பயணி சிக்கினார்

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்திற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, இந்த விமானத்தில் வந்திருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் டிராலி டைப் பெரிய பை ஒன்று வைத்திருந்தார். அதில் சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் மட்டுமே இருப்பதாக கூறினார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் டிராலி பையை திறந்து பார்த்தபோது, அதனுள் மலேசியா மற்றும் இந்தோனேசியா வனப்பகுதிகளில் வசிக்கும் அபூர்வ வகையை சேர்ந்த ஏகில் கிப்பான் கருங்குரங்கு ஒன்றும், ஈஸ்டர்ன் கிரே கிப்பான் குரங்கு ஒன்றும் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது இந்த அபூர்வ வகை குரங்குகளை வளர்ப்பதற்காக எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் அந்த குரங்குகளை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த ஆவணங்களும் இல்லை. அதோடு குரங்குகளுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா என்ற பரிசோதனை சான்று, நோய் கிருமி தடுப்பு ஊசிகள் எதுவும் போடப்படவில்லை.

எனவே, குரங்குகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய் கிருமிகள், நமது நாட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவிவிடும் என்பதால் இரண்டு குரங்குகளையும் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்துக்கு சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருப்பி அனுப்பினர். குரங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த சென்னை பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

The post பாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 2 அபூர்வ குரங்குகள் பறிமுதல்: சென்னை பயணி சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: