சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலின்போது, ராஜிவ் காந்தியுடன் உயிர் நீத்த காவலர்களுக்கு, முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிர்நீத்த காவலர்களின் 33வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், முன்னாள் ஐஜி வடிவேல், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம், ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று, நினைவுத்தூண் முன்பு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பணி ஓய்வுபெற்ற எஸ்பிக்கள் மற்றும் காவலர்கள் பலரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
The post ராஜிவ் காந்தியுடன் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி: வால்டர் தேவாரம் பங்கேற்பு appeared first on Dinakaran.