மழைக்காலமும் முதியோர் நலமும்!

நன்றி குங்குமம் தோழி

முதுமையை “வியாதிகளின் மேய்ச்சல் நிலம்” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.மழைக்காலம் வந்தாலே முதியோர்களுக்குத் திண்டாட்டம்தான். பருவ நிலை மாற்றம் முதியவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. உடல்ரீதியாய் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி அவர்களை நிலைத்தடுமாறச் செய்துவிடும்.

நமது வீட்டு முதியவர்களும் நம் குழந்தைகளை போன்றே கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே… மழைக்காலத்தில் எப்படி கவனத்துடன் அவர்களை பாதுகாப்பது என்கிற கேள்வியை முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அவர்களிடம் முன் வைத்தபோது…

‘‘மனிதர்களுக்கு வயது ஏற ஏற, நோய்களை எதிர்த்துச் செயல்படும் ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் பல்வேறு செல்களின் செயல்திறன்கள் குறைய ஆரம்பிக்கிறது. பல்வேறு நோய்களுக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரைகளும் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையக் காரணமாக உள்ளன. இதனால், முதியோர்கள் தொற்று நோய்களுக்கு எளிதில் ஆளாகி விடுகின்றனர்.

மழை நேரத்தில் தண்ணீரை குறைவாகக் குடிப்பதாலும் இவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னையும் வரும். எனவே மழை நேரங்களில் பழங்களை உணவாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கொய்யாப் பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் உலர் பழங்களையும் மழை காலத்தில் அதிகம் சாப்பிடலாம். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து பழங்களைச் சாப்பிடுதல் அறவே கூடாது. குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து சூப் போன்ற சூடான பானங்களை பருகுதல் நன்று. சூடான உணவுகளையே எப்போதும் உண்ணுதல் வேண்டும். தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து வெதுவெதுப்பான நீரையே பருகுதல் வேண்டும்.

மழை நேரத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிப்புக்குள்ளான முதியவர்களே. இவர்களுக்கு இன்ஹேலர் போன்ற மருந்து உபகரணங்களை எப்போதும் வீடுகளில் முன்கூட்டியே வாங்கி வைத்திருத்தல் வேண்டும். சூட்டைத் தரக்கூடிய கம்பளி உடைகளையே (sweater) மழை நேரத்தில் அதிகம் அணியச்செய்ய வேண்டும். கால்களுக்கு காலுறைகளை அணிவித்த பிறகே காலணி போட வேண்டும். குளிர்ந்த காற்று காதுகளுக்குள் உட்புகாதவாறு பஞ்சினால் காதுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.இதயநோய் உடைய முதியவர்கள் எப்போதும் சிறிய வடிவிலான நைட்ரேட் மாத்திரைகளை வெளியில் செல்லும்போதும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். வலி வந்ததும் அவற்றை எடுத்து நாக்கிற்கு அடியில் வைத்துக்கொண்டால் திடீரென வரும் வலியிலிருந்து தப்பலாம்.

தைராய்டு நோய் பிரச்னை உள்ள முதியவர்கள் குளிர் தாங்க மாட்டார்கள். இவர்கள் வெயில் வந்த பிறகே வெளியில் செல்ல வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் செல்வதைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். எப்போதும் குடிப்பதற்காக வெதுவெதுப்பான தண்ணீரைக் கையில் கொண்டு செல்லுதல் வேண்டும். கண்டிப்பாக இவர்கள் கம்பளிப் போர்வை மற்றும் கனமான சால்வைகளை கைவசம் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். காதுக்குள் குளிர்ந்த காற்று உட்புகா வண்ணம் கண்டிப்பாக இவர்கள் தங்களை பாதுகாக்க வேண்டும். காதுக்குள் செல்லும் குளிர்ந்த காற்று சிலநேரம் முகவாதம் போன்ற நோயினை இவர்களுக்கு ஏற்படுத்திவிடும்.

முதியவர்களுக்கு கால் எலும்பு மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டு வலியினை அதிகம் ஏற்படுத்தும். கட்டாயம் சிறிய நடைப்பயிற்சி, கை கால்களை அசைத்தல் போன்ற சின்னச் சின்ன பயிற்சிகளை சிறிது நேரம் காலை மற்றும் மாலை வேளைகளில் இடைவெளிவிட்டு மேற்கொள்ளுதல் வேண்டும். தளர்வான நடை கொண்ட இவர்களின்
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஊன்றுகோலை(walking stick) பயன்படுத்துவது முற்றிலும் இவர்களுக்கு பாதுகாப்பே.

தோலில் வெடிப்பு, சுருக்கம் வராமல் இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி போன்றவைகளை தடவலாம். அதேபோல் மென்மைத்தன்மை கொண்ட சோப்புகளை உபயோகப்படுத்துதல் வேண்டும். பயத்த மாவை அரைத்து உடலில் தடவிக் குளித்தாலும் தோல் வறட்சியடையாமல் தடுக்க உதவும்.சில தடுப்பூசிகளின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். ப்ளூ காய்ச்சல் வராமல் இருக்க செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மழை மற்றும் குளிர்காலத்தில் ஆண்டிற்கு ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

நிமோனியா நோய் தாக்குதல் என்பது சளி மற்றும் இருமலோடு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒருவகைத் தொற்று. இதைத் தடுக்க முதிய வயதினர் 50 வயதிற்கு பின் ஒரு முறை இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போதும். சிலருக்குத் தேவையை பொறுத்து 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒருமுறை இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டி வரும். மேலும் இவர்கள் சத்தான உணவுப் பொருட்களுடன் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களையும், பாதாம் போன்ற பருப்பு வகைகளையும், பச்சை பயறு போன்ற பயறு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை பெறலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக, நமது குழந்தைகளாக மாறிக்கொண்டிருக்கும் நம் வீட்டு முதியவர்களை, அவர்களின் முதுமையை ரசித்து, பொக்கிஷங்களாகப் போற்றி, இந்த மழைக்காலத்தில் நோயின்றி அவர்களைப் பாதுகாப்போம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மழைக்காலமும் முதியோர் நலமும்! appeared first on Dinakaran.

Related Stories: