புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு

சென்னை: புழல் விசாரணை சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன், பேட்டரிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என 3 சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை காவலர்கள் சிறை வளாகத்துக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணை சிறையில் உள்ள கைதி ஒருவர், கழிவறையில் ரகசியமாக செல்போனில் பேசிகொண்டு இருந்ததை சிறை காவலர்கள் பார்த்தனர்.

விசாரணையில், சிறையில் உள்ள மாரிமுத்து, சரவணன், மகேந்திரன், ராஜா, அசோக், பரத், விக்னேஷ், எட்வின் ஆகிய 8 கைதிகள் ஒரே செல்போன் மூலம் வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் பலருக்கு பேசியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு செல்போன், 2 செல்போன் பேட்டரிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுக்கு செல்போன் எப்படி வந்தது, யார் கொடுத்து அனுப்பியது, யார், யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்கள், என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: