சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை, புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 39 மாத கால நிறைவில் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் மரத்தேர் உட்பட ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.

சட்டமன்ற அறிவிப்பின்படி இத்திருக்கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்வதற்கு ரூ.31 லட்சம் செலவில் மரத்தேர் செய்யும் பணி நிறைவுபெற்றுள்ளது. இத்திருக்கோயிலுக்கு 01.02.2023 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 1,983 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கின்றது. வருகின்ற 28 ஆம் தேதி 11 திருக்கோயில்களுக்கும், 30 ஆம் தேதி 9 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்குகள் நடைபெற உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 2003 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கும். 2,000 மாவது திருக்கோயில் குடமுழுக்கில் துறையின் அமைச்சர் என்ற முறையில் பங்கேற்கவுள்ளேன். கடந்த 39 மாத காலங்களில் 2,000 குடமுழுக்குகளை நடத்தியது பெரிய சாதனையாகும். அதேபோல திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,770 கோடி மதிப்பிலான 6,850 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதோடு, 1,71,730 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசியலுக்காக புதிதாக கையில் எடுத்ததாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த ஆட்சி ஏற்பட்டதிலிருந்து எண்ணற்ற திருப்பணிகளை முருகன் திருக்கோயில்களில் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருக பெருமான் அமைந்துள்ள 72 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 831 முருகன் திருக்கோயில்களில் 1,067 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக, பெருந்திட்ட வரைவின் கீழ் 7 முருகன் திருக்கோயில்களில் ரூ. 859.82 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூர் திருக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் தொடங்கப்பட்டு இதுவரை 4 கட்டங்களாக 813 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக அரசு ரூ.1.58 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. இப்படி எண்ணற்ற பணிகளை தொடர்ந்து எவ்வித தவறுக்கும் இடம்கொடாமல் நேர்த்தியோடு செய்து வரும் அரசு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசாகும்.

எந்த ஒரு நற்காரியத்தை செய்தாலும், மாற்றுக் கருத்துகள் வரும் போதுதான் அந்த செயல் இன்னும் உறுதிப்படும். அந்த வகையில் பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் தான் சமயம் சார்ந்த வகுப்புகளை தொடங்குவதாகவும், முருகன் சம்பந்தப்பட்ட இலக்கியங்களில் முருகருடைய இலக்கிய புகழை அறிந்து கொள்வதற்காக அது சம்பந்தமான போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்த்தப்படும் என்று கூறியிருக்கின்றோம்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து 4 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் அவற்றிற்கு தடை இல்லை நீதிமன்றம் அறிவித்ததோடு, அதில் சமயம் சார்ந்த வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏற்ப சைவ சித்தாந்த வகுப்புகள் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல தான் திருக்கோயில்களின் நிதியிலிருந்து நடத்தப்படும் கல்லூரிகளில் அங்கு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு சமயம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவது என திட்டமிட்டிருக்கிறோம். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களிடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடத்திலும் முத்தமிழ் முருகன் மாநாடு குறித்தும், அதன் தீர்மானங்கள் குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறோம்.

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் குறிப்பாக இனம், மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட பங்கேற்று சிறப்பித்தனர். இம்மாநாடு வரலாற்றில் ஒரு மைல் கல்லாக திகழும். இந்த மாநாட்டை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் தந்து உலகளவில் கொண்டு சேர்த்தமைக்காக துறையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பிற்கினிய சகோதரி நமீதா நேற்றைய தினம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே பழநி திருக்கோயிலில் இதுபோன்ற பிரச்சனை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் அந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்வதற்கு ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

சகோதரி நமீதா அவர்கள் மனது புண்படும்படியாகவோ அல்லது விரும்ப தகாத அளவிற்கு சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தாலோ அதுகுறித்து விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவிற்கு வருத்தப்படுவதாக இருந்தால் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம். முதலமைச்சர் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை இரண்டு கண்களாக, கரங்களாக பார்ப்பவர். சிறுபான்மையினர் அழைக்கின்ற போதெல்லாம் அவர்களின் மாநாடாக இருந்தாலும், விழாக்களாக இருந்தாலும் கலந்து கொள்கின்றார். அதேபோல் தான் முத்தமிழ் முருகன் மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை செயல்படுத்தியதோடு, 14 போற்றி புத்தகங்களையும் தமிழில் வெளியிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்தும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் பழனி திருக்கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடத்தப்பட்டது. இது தொடரும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கையும் அழுத்தம் தந்து செயல்படுத்தும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., இணை ஆணையர் ஜ.முல்லை, அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் பெ.வெற்றிக்குமார் மற்றும் அறங்காவலர்கள், உதவி கோட்டப் பொறியாளர் விஜயா, செயல் அலுவலர் சா.இராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Related Stories: