பன்ட் பற்றி பான்டிங் வியப்பு: அதே அதிரடி ஆட்டம்!

புதுடெல்லி: கார் விபத்தில் படுகாயம் அடைந்து ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட் முழு உடல்தகுதியுடன் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள நிலையில், வலைப்பயிற்சியில் அவர் பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவதாக பயிற்சியாளர் பான்டிங் கூறியுள்ளார். பெங்களூரிவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நடந்த சோதனையில் பன்ட் தனது உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து, ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் அவர் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது விக்கெட் கீப்பராகவும் செயல்பட கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட பன்ட் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.

இது குறித்து, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆஸி. அணி முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் கூறியதாவது: கடந்த சீசனில் ரிஷப் பன்ட் விளையாடாதது எங்கள் அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. எங்கள் அணி மட்டுமல்ல… ஐபிஎல் தொடர் மற்றும் ரசிகர்களுக்குமே அது பெரிய இழப்பு தான். தற்போது அவர் மீண்டும் எங்களுடன் இணைந்து பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளது ஒட்டுமொத்த அணிக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. வலைப் பயிற்சியின்போது முகத்தில் புன்னகையுடன் பன்ட் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பார்க்கவே உற்சாகமாக உள்ளது. இது ஆரம்பம் தான். நாங்கள் இன்னும் முழுவீச்சில் பயிற்சியை தொடங்கவில்லை. முதல் ஆட்டத்துக்கு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், பயிற்சி முகாம் சிறப்பாகத் தொடங்கி இருக்கிறது.

அனைத்து வீரர்களும் முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர் வரும் சீசனை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மட்டுமல்ல…கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் குறிக்கோள். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு பான்டிங் கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மார்ச் 23ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் முல்லன்பூர் ஸ்டேடியத்தில் மோதுகிறது.

 

The post பன்ட் பற்றி பான்டிங் வியப்பு: அதே அதிரடி ஆட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: