புதுவண்ணாரப்பேட்டையில் பொதுக்கூட்டம்: அனுமதியின்றி கொடி, பேனர், எல்இடி திரை அமைத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பொதுக்கூட்டத்தில் அனுமதியின்றி கொடி, பேனர், எல்இடி திரை அமைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நடிகை குஷ்பு, இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத்துறை‌ பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பால்கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, “இது பழைய பிஜேபி கட்சி அல்ல. இப்போது உள்ளது அண்ணாமலையின் பிஜேபி கட்சி. எதுவேண்டுமானாலும் பேசுவோம், எங்களை காப்பாற்ற பால்கனகராஜ் உள்ளார். திமுக கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவோம்” என்றார்.

அமர்பிரசாத் ரெட்டி பேசியது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுக்கூட்டத்தில் கொடி அமைத்தது, பேனர் வைத்தது, எல்இடி திரை அமைத்ததற்கு மாநகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அனுமதியின்றி கொடி, பேனர், எல்இடி திரை அமைத்ததால் போலீசார், பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுவண்ணாரப்பேட்டையில் பொதுக்கூட்டம்: அனுமதியின்றி கொடி, பேனர், எல்இடி திரை அமைத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: