திருவள்ளூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30ம் தேதிக்குள் செலுத்தி ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையை பெறலாம்: நகராட்சி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 – க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 13 ம் தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84 (1) ல், சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 – 24ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகின்ற ஏப்ரல் 30 ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர்களாக ஆகின்றனர். இந்நிலையில் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்த நகராட்சி மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப் பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வசூல் மையம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை, வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வருகின்ற ஏப்ரல் 30 ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், மேலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post திருவள்ளூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30ம் தேதிக்குள் செலுத்தி ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையை பெறலாம்: நகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: