நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1,934 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1,933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கத்தை சார்ந்த இந்திரா நகர், மேக்ரோ மார்வெல், சஹாஜ் என்கிளேவ், சேது லட்சுமி நகர், சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 3.33 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில் ரூ.22 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடை திட்டம்.

மாதவரத்தை சார்ந்த லட்சுமிபுரம், மாதவரம் பூஸ்டர், மாதவரம் பேருந்து நிலையம், கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 27 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் ரூ.44 கோடியே 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம். நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், கங்கையம்மன் கோயில் தெரு பகுதிக்கு நாளொன்றுக்கு 3.1 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் ரூ.26 கோடியே 46 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடை திட்டம். நெற்குன்றத்தை சேர்ந்த ஏ.வி.கே.நகர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நகர் பகுதிகளுக்கு ரூ.11 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட கண்ணன் காலனியில் நாளொன்றிற்கு 5 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில் ரூ.10 கோடியே 55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீரகற்று நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள், அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ‘பி’ கழிவுநீர் உந்துநிலையம் முதல் வில்லிவாக்கம் தடாகம் கழிவுநீர் உந்து நிலையம் வரை உள்ள 300 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு உந்துகுழாய்களை நாளொன்றுக்கு 3.50 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் ரூ.5 கோடியே 36 லட்சம் செலவில் 450 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு கழிவுநீர் உந்துகுழாய்களாக விரிவாக்கம் செய்யும் பணி.

ராமாபுரத்தை சார்ந்த பாரதி சாலை, அம்மன் நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 10.35 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் ரூ.32 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடை திட்டம். ராமாபுரத்தை சார்ந்த பணிமனை 154 மற்றும் 155 பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 26.58 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் ரூ.52 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.204 கோடியே 36 லட்சம் செலவில் சுமார் 5.04 லட்சம் முடிவுற்ற குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் ரூ.78 கோடியே 42 லட்சம் செலவிலான 40 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி பகுதிகளில் ரூ.278 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு பாதாள சாக்கடை திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.1,934 கோடி முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 121 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* ரூ.18.61 கோடி பங்கு ஈவுத்தொகை
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தின் 2022-23ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

The post நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1,934 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: