குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

எல்லா பருவநிலை காலங்களிலுமே சர்க்கரை நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலம் என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு சவாலான பருவம் என்றே சொல்லலாம். குளிர்கால விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களும் இணைந்து மேலும் சிக்கல்களை அதிகரிக்கலாம். குளிர்கால பருவ நிலையில் இயல்பாகவே இரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும். குளிர்ந்த வெப்பநிலை உடலுக்கு அழுத்தத்தை உண்டு செய்யும்.

இதனால் இயல்பாகவே இன்சுலின் உற்பத்தி குறையும். மேலும் மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீடும் அதிகமாக இருக்கும் இந்த பருவத்தில் பொதுவாக இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கக் கூடும் என்கிறார் சர்க்கரை நோய்க்கான மூத்த நிபுணரும், சிறப்பு மருத்துவருமான வி.மோகன். மேலும், சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார்கள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் பகிர்ந்து கொள்கிறார்.

பருவகால மாற்றத்தில் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு சிக்கல் நோய்த்தொற்றுகள் தீவிரமாக செயல்படக் கூடிய காலம் இது என்பதே. இக்காலத்தில் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உண்டு. எல்லா பருவங்களைக் காட்டிலும் இந்த குளிர்கால பருவத்தில் மட்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் காய்ச்சல் தொற்று தீவிரமாக இருப்பதைப் பார்க்கலாம். இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு எதிராக மன அழுத்த ஹார்மோன் அதிகளவு தூண்டப்படுகிறது.

இவையும் உடலில் இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்க செய்கின்றன. குளிர்காலங்களில் சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் கட்டுப்பாடுடன் பல கொள்கைகளை கடைப்பிடித்து வந்தாலும், இரண்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதை பின்பற்றுவதை சவாலாக்குகிறது. கொண்டாட்டங்களின் பொது விருந்துகளில் பரிமாறப்படும் அதிக கலோரி உணவுகளாலும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. மேலும் குளிர்காலத்தில் வானிலை வறட்சியாகவும் காற்றில் ஈரப்பதமில்லாமல் வறண்டும் இருக்கும். இதனால் நமது சருமம் வறண்டு தென்படும். வறண்ட சருமமானது விரிசல்களை உண்டு செய்யும். சரியான முறையில் சருமத்தை பராமரிக்காத போது இது தொற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

குளிர்காலங்களில் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க விழிப்புணர்வுடன் பிரத்யேகமான திட்டமிடலையும் கொண்டிருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது மிக முக்கியம். குளிர்ச்சியான வெப்பநிலையில் உடலை அதிகம் வெளிப்படுத்தக் கூடாது, ஆண்டுதோறும் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். தோல் மற்றும் பாதங்களில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறதா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

அதற்கான பரிசோதனை முறைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். தினசரி நடைமுறைகளில் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளை இணைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று சர்க்கரை நோயாளிகள் விடுமுறை கால கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டாம். ஆனால் பலமான விருந்துகளின் போது உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் போன்றவற்றை சரியாக திட்டமிடுவதன் மூலம் இந்த குளிர்காலத்தை பாதிப்பு நேராமல் கடந்து செல்லலாம். குளிர்கால சிக்கல்கள் ஏற்படாமல் எப்படி தடுப்பது? சர்க்கரை நோயை நிர்வகிக்க என்ன செய்வது?

நீரிழிவு நோயாளிகள் குளிர்கால சிக்கல்களை நிர்வகிக்கவும் தடுக்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குளிர்வெப்பநிலை மற்றும் வழக்கமான மாற்றங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்த்தோம். உண்மையில் குளிர்காலம் அல்லாத வெப்பமண்டல நாடுகளில் இந்த பிரச்னைகளை சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் குளிர் அதிகமாக உள்ள இடங்களில் நீங்கள் வசித்தால் உங்கள் நீரிழிவை கட்டுக்குள் வைக்க இந்த ஆரோக்கியமான குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். உங்கள் இரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணிக்க வேண்டும்உங்கள் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதியுங்கள்.

உடல்நிலை சரியில்லாமல் அல்லது குறைந்த இரத்த சர்க்கரையின் அறிகுறிகளை அனுபவிக்கும் போது உடனடியாக இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். கைகள் குளிர்ச்சியாக இருக்கும் போது சர்க்கரை அளவு பரிசோதிப்பது சவாலாக இருக்கலாம். எனினும் பரிசோதனைக்கு முன்பு கைகளை நன்றாக சூடேற்றுங்கள். வெப்பநிலை குறைய கைகளை நன்றாக தேய்த்து வெதுவெதுப்பான நிலைக்கு கொண்டு வந்து பரிசோதிக்கலாம்.

உடலை சூடாக வைத்திருங்கள்

குளிர்ந்த கால நிலை உடலை கடினமாக்கும். விறைப்பாக வைத்திருக்கும். அப்போது உடல் குளிர்ச்சியை குறைக்க உடலை கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். வசதியான கனமான போர்வையின் கீழ் படுத்துக்கொள்வது உடல் வெப்பநிலையை உயர்த்தும். உடற் பயிற்சி அவசியம் என்றாலும் வீட்டுக்குள் செயல்படுவது குளிர்ச்சியை அதிகரிக்காது. சூடான தேநீர் அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) குடிப்பது உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும்.

தடுப்பூசி அவசியம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருடந்தோறும் காய்ச்சல் தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். காய்ச்சல், மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்வது காய்ச்சலை தடுக்கும். காய்ச்சல் வந்தாலும் தீவிரமாக மாறாது.

சருமம் மற்றும் பாதங்களில் கவனிப்பு

குளிர்கால மாதங்களில் வறண்ட காற்று மற்றும் உட்புற வெப்பம் சேர்ந்து வறண்ட சருமம் மற்றும் விரிசல் தொற்று உண்டாகலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க விழிப்புடன் இருங்கள். தினமும் உங்கள் சருமம் குறிப்பாக பாதங்களை கவனியுங்கள். கால்களில் சருமத்தில் ஏதேனும் சிக்கல்களின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்யுங்கள்.

உடல் பயிற்சி அவசியம்

சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று வலியுறுத்துவதுண்டு. அதனால் உடல் செயல்பாடுகளை குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டாம். வானிலை குளிர்ச்சியால் உங்களுக்கு வெளியில் செல்வது கடினமாக இருக்கலாம். எனினும் குடும்பத்தினருடன் இணைந்து வீட்டிலேயே எளிய பயிற்சி செய்யலாம். யோகா போன்றவை மனம் மற்றும் உடல் இரண்டுக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கும்.

உணவு முறையில் கவனம்

சர்க்கரை நோயாளிகள் வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது உணவு முறையில் என்று சொல்லலாம். விடுமுறை கொண்டாட்டங்கள், விருந்துகளில் அதிக கலோரி உணவுகள் இருக்கலாம். இவை வழக்கமான உணவு திட்டங்களை சீர்குலைக்க கூடியவை. இந்நிலையில் விருந்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டாம். ஆனால் இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இன்சுலின் மற்றும் நீரிழிவு உபகரணங்கள் பாதுகாப்பு

இன்சுலின் மற்றும் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் குளிர் வெப்பநிலையில் இருந்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இன்சுலின் உறைந்த நிலையில் அவை கரைந்த பிறகு பயன்படுத்தினாலும் கூட அதன் செயல்திறன் சீராக இருக்காது. இன்சுலினுக்கு உறைபனி காலங்களில் இருந்து சரியான முறையில் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் பயன்பாடு கொண்டிருந்தால் குளிர்காலங்களில் அதை சரியாக பயன்படுத்தும் முறையை மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்து நிர்வகிப்பது பாதுகாப்பானது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள்! appeared first on Dinakaran.

Related Stories: