மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் டாக்டர்

ஹேப்பி ஹார்மோன்ஸ்

உலகிலுள்ள மனிதர்களின் விருப்பங்களில் ஒன்றாக எப்போதும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதேயாகும். மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும்
முக்கியக் காரணமாக இருப்பதும் மகிழ்ச்சியே. அதாவது, மனிதன் தான் உண்ணும் உணவில் இருந்து, உடுப்பது, பேசுவது, பழகுவது, வேலை செய்வது, பொருள் ஈட்டுவது, செலவுகள் செய்வது வரை அனைத்துச் செயல்களும் அத்தியாவசியமானது என்றாலும், அதில் தன் மகிழ்ச்சியும் இன்றியமையாததாக இருக்கின்றது. அதனால்தான், நாம் செய்யும் வேலை
களில் வெற்றிகள், பாராட்டுகள், அங்கீகாரம் என பலவழிகளில் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றோம்.

இந்த ரசாயனத் தூதுவர்களின் முக்கியப் பணியானது, நமது உடல் நிலையையும், மனநிலையையும் சீராக வைத்திருப்பதே. இவற்றில் சில ஹார்மோன்கள் நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றன. அதனால் அவற்றை மட்டும் ஹேப்பி ஹார்மோன்ஸ், அதாவது, மகிழ்ச்சி தருகிற நாளமில்லா சுரப்பிகள் என்றழைக்கிறோம். இதில் டோபமைன் (Dopamine), செரோடோனின் (Serotonin), எண்டோர்பின்ஸ் (Endorphins) மற்றும் ஆக்ஸிடோசின்(Oxytocin) என்கிற 4 ஹார்மோன்ஸ்தான் ஹேப்பி ஹார்மோன்ஸ் என அழைக்கப்படும்.

இந்த நான்கு ஹார்மோன் தூண்டுதலால்தான் நமக்கு மகிழ்ச்சியுடன் சேர்ந்து அன்பு, அரவணைப்பு, உந்துதல் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன்களே வலி மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து நம்மை மீட்டு, நல்லெண்ணங்களையும் நிம்மதியையும் தருகின்றன. நமக்கு மகிழ்ச்சியை தரும் இந்த ஹார்மோன்களின் செயல்பாடுகளையும், இந்த ஹார்மோன்களை எவ்வாறு தூண்டுவது என்பதைப் பற்றியும் விரிவாக அலசுவோம்.

டோபமைன்

உடலை சமநிலையில் வைக்கவும், உடலுக்குத் தேவைப்படும் உந்துதலுக்கும், மூளையின் நினைவாற்றல், கற்றல் திறன் போன்றவற்றுக்கு இந்த ஹார்மோன்களே உதவி செய்கிறது. ஒரு இலக்கை நாம் அடையும் போது, மனதிற்குப் பிடித்த செயலை செய்து முடிக்கும் போது, பிடித்த உணவைச் சாப்பிடும் போது போன்ற செயல்களில் மூளையில் டோபமைன் சுரக்கிறது. உதாரணத்திற்கு, பிடித்த ஒரு உணவைச் சமைக்கும்போதே, அதன் ருசி மற்றும் வாசனையில் டோபமைன் அளவு உயர்ந்து உணவின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிடுவோம். பின் அதை ருசித்துச் சாப்பிடும்போது டோபமைன் அளவு இன்னும் கூடுதலாகி மனம் மேலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்.

டோபமைன் ஹார்மோன் நம் மூளையின் வெகுமதி எனப்படும் இன்பத்துடன் தொடர்புடையது. எனவேதான் ஒருமுறை பெற்ற இன்பத்தை மீண்டும் பெறவேண்டும் என்கிற தூண்டுதலில், நமக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது, பிடித்த விளையாட்டை விளையாடுவது, பிடித்த செயல்களை மீண்டும் செய்ய வேண்டும் என்கிற தூண்டுதல் போன்றவற்றால் மகிழ்ச்சி நமக்கு கிடைக்கின்றது. அதாவது, காபி குடிப்பதற்கு அடிமையாவதைப் போல எனச் சொல்லலாம்.

எண்டோர்பின்ஸ்

இது மகிழ்ச்சித் தரும் ஹார்மோனாகவும் இயற்கை வலி நீக்கியாகவும் உடலில் செயல்படுகின்றது. கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் வலிகளை நமக்குப் பிடிப்பதற்கு காரணம் இந்த ஹார்மோன் சுரப்பிகளே. அதனால்தான் இதற்கு வலி நிவாரணி ஹார்மோன் என்ற பெயரும் இருக்கிறது. உதாரணத்திற்கு, உடற்பயிற்சி செய்தல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களைச் செய்யும்போது எண்டோர்பின்ஸ் அதிகளவில் தூண்டப்படும்.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இன்பத்தை அதிகப்படுத்துதல், தன்னம்பிக்கை, நினைவாற்றல் சக்திக்கு உதவுதல், நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுதல் என உடலின் பல செயல்களுக்கு இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.வியர்வைச் சொட்ட சொட்ட கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது, விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது, காமெடி படம் பார்ப்பது, நண்பர்களுடன் பேசி வாய்விட்டுச் சிரிப்பது போன்ற நடவடிக்கைகளின் போது எண்டோர்பின்ஸ் அளவு உடலில் அதிகரிக்கும்.

செரோடோனின்

நமது மனநிலையின் தன்மையையும் நடத்தையையும் தீர்மானிப்பது இந்த ஹார்மோனே. மனதில் அமைதியை நிலைநிறுத்தவும், மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நமது மனநிலையை சமநிலையில் வைப்பதற்கு இந்த ஹார்மோன் உதவும். அறிவாற்றல், கற்றல், ஞாபகசக்தி இவற்றுக்கும் இந்த ஹார்மோனே அடிப்படை.

செரோடோனின் சுரப்பை அதிகரிக்க நன்றி உணர்வோடு இருக்கும் பழக்கத்தை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நமது வாழ்வில் நமக்கு கிடைத்த நேர்மறையான விஷயங்களை பார்க்கப் பழகுவதும், அதற்கான நன்றி உணர்வை செலுத்துவதும் மிகவும் முக்கியம்.அர்த்தமுள்ள நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, நண்பர்களுடன் சேர்ந்திருப்பது, நம்மீது அக்கறை செலுத்துபவர்களுடன் நேரத்தை செலவிடுவது என நம்மை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

கூடுதலாக இயற்கையுடன் இணைந்து நேரத்தைச் செலவிடுவதும் முக்கியம். உதாரணத்திற்கு காலை, மாலை வேளைகளில் சூரிய ஒளி நம்மீது படுகிற இடத்தில் நின்று உடற்பயிற்சி
செய்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது, இயற்கை சூழலில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் போன்ற செயல்களின் வழியாக செரோடோனின் சுரப்பினை நம்மால் அதிகரிக்க முடியும்.

ஆக்ஸிடோசின்

நேர்மறையான எண்ணம், நேர்மறை உரையாடல், மரியாதை உணர்வு, உறவுகளில் நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை உருவாக்குதல் போன்றவற்றோடு இந்த ஹார்மோனே சமூக பிணைப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.ஆண்களின் விந்தணு அதிகரிப்பிற்கும், பெண்களின் குழந்தைபேறு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் நேரங்களில் இந்த ஹார்மோன் வேலை செய்து, குழந்தை பிறப்பிலும், பாலூட்டலிலும் தாய்-சேய் உறவில் இணக்கத்தை ஏற்படுத்த ஆக்ஸிடோசின் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

நண்பர்களுடன் பேசும்போதும், காதல் மற்றும் அன்பை வெளிப்படுத்தும்போதும், பிறரை அரவணைப்புடன் கட்டியணைக்கும் போதும், அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடும் போதும், உடலுறவு நேரத்திலும், பிடித்தவர்களுடன் நெருங்கிப் பழகுவது மற்றும் செல்லப்பிராணிகளுடன் விளையாடுகிற போதும் ஆக்ஸிடோசின் வெளிப்படுகின்றது.

எனவேதான் இது லவ் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகின்றது.நமது உடலின் ஆற்றலை அதிகரிக்க விட்டமின்களை எடுத்துக் கொள்வது போல, நம் மகிழ்ச்சியை அதிகரிக்க, மேலே சொன்ன செயல்களைச் செய்து, தேவையான ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க பழகிக் கொள்வோம்.

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Related Stories: