புரோ கபடி 11வது சீசன் புதிய பயிற்சியாளர்கள் பொறுப்பேற்பு

சென்னை: புரோ கபடி போட்டியின் 11வது தொடர் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. மொத்தம் 12 அணிகளுக்கு ஏலத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், இந்த அணிகளுக்கான தலைமை பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புனேரி பல்தானை முதல் முறையாக பைனலுக்கு (2023) முன்னேறவும், முதல் முறையாக சாம்பியன் பட்டம் (2024) வெல்லவும் காரணமாக இருந்தவர் தலைமை பயிற்சியாளர் பி.சி.ரமேஷ். அவர் மீண்டும் புனே அணியின் பயிற்சியாளராக தொடருகிறார். கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்த தெலுகு டைடன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கோலம்ரேசா மஸந்தரானி (ஈரான்), மீண்டும யு மும்பா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

தெலுங்கு டைடன்ஸ் பயிற்சியாளராக கிரிஷண்குமார் ஹூடா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் 8வது சீசனில் டெல்லி அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர். பெரும்பான்மை அணிகளில், ஏற்கனவே இருந்தவர்களே மீண்டும் பயிற்சியாளர்களாக தொடர்கின்றனர். அதே சமயம், தமிழ் தலைவாஸ் அணிக்கு இதுவரை இல்லாத வகையில் 2 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட உதயகுமாரும், நட்சத்திர வீரர் தர்மராஜ் சேரலாதன் ஆகியோர் பயிற்சியளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உதயகுமார் தலைமை பயிற்சியாளராகவும், சேரலாதன் வியூகப் பயிற்சியாளராகவும் இருப்பார்கள்.

இந்திய அணி 2002, 2006, 2014ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றபோது பயிற்சியாளராக இருந்தவர் உதயகுமார். பாட்னா அணி 4வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்றபோது அதன் கேப்டனாக செயல்பட்டார் சேரலாதன்.

The post புரோ கபடி 11வது சீசன் புதிய பயிற்சியாளர்கள் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: