தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை குத்தி கொன்ற காதலன்: தற்கொலைக்கு முயன்றதால் உயிர் ஊசல்

திருப்பூர்: திருப்பூர் தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சூளை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (21). இவர் கல்லூரியில் பி.காம் சிஏ படித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சத்யஸ்ரீ திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நரேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நரேந்திரன் லாரி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரனுடன் சத்யஸ்ரீ பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று காலை நரேந்திரன் காதலி பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சத்யஸ்ரீயை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர். காதலி உயிரிழந்த பின் நரேந்திரனும் கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். உயிருக்கு போராடிய நரேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ‘எனக்கு இல்லாத நீ யாருக்கும் இல்லை’
நரேந்திரன் காதலியை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து பஸ் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு கடையில் கத்தியை வாங்கியிருக்கிறார். நரேந்திரனுடன் சத்யஸ்ரீ கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சத்யஸ்ரீக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் நரேந்திரன் சந்தேகித்துள்ளார். இதனால் கத்தியால் குத்தும்போது, ‘‘எனக்கு இல்லாத நீ வேற யாருக்கும் இல்லை’’ என சத்தம் போட்டுள்ளார்.

* காதலிக்க மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்த காதலன்
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மருங்கூர் சத்திரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் மணிகண்டன் (35). கூலித்தொழிலாளி. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதை ஜெயஸ்ரீ வீட்டில் கண்டித்து வந்துள்ளனர். இதனால் ஜெயஸ்ரீ மணிகண்டனிடம் பேசி பழகுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயை வழிமறித்து பேச முயன்றார். ஆனால் ஜெயஸ்ரீ இதை கண்டுகொள்ளாமல் சென்றார். அப்போது மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். இதில், படுகாயமடைந்த ஜெயஸ்ரீ திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை குத்தி கொன்ற காதலன்: தற்கொலைக்கு முயன்றதால் உயிர் ஊசல் appeared first on Dinakaran.

Related Stories: