முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றாலே பிரதமர் மோடிக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்கிறது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் கடும் தாக்கு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி.,எஸ்டி., பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.ஸ்டாலினின் பெரும் முயற்சியில் இந்தியா கூட்டணி கட்டமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றாலே பிரதமர் மோடிக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்க தொடங்கி விட்டது. இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும் மு.க.ஸ்டாலின் தான் அவரது முதல் குறியாக இருக்கிறது. அந்த அளவுக்கு மோடியின் கண்களில் பயத்தைக் காட்டியிருக்கிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். வட மாநிலங்களில் சமீபகாலமாக மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக இளைஞர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் பருப்பு வேகாமல் போனால் என்ன செய்வது? என்ற பயத்தில் தான் தமிழ்நாட்டில் ஓட்டுக்களைப் பெற முடியுமா நோக்கில் தொடர்ந்து இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

சென்னையில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, ஆதாரமில்லாமல் ஏதோ வழிப்போக்கர் போல பொத்தாம் பொதுவாக திமுக மீது சேற்றை வாரி இரைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பாஜக தொடங்குவதற்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த கட்சி திமுக ஆட்சியில் அமர்ந்தது முதல் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது. காமலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். அதேபோல் தேர்தல் நன்கொடை பத்திரம் என்ற மெகா ஊழலில் ஈடுபட்டு உச்ச நீதிமன்றத்தில் குட்டுப் பட்ட மோடி, இன்றைக்கு ஆதாரமே இல்லாமல் திமுக மீது ஆதாரமற்ற புகாரைச் சொல்லியிருக்கிறார்.

மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் போன்ற சுயச்சார்பு திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளன. இது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி. இந்த நிலையில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறுவது உச்சக்கட்ட நகைச்சுவையாகும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகமாக இருக்கிறதாம். போதைப் பொருளின் தலைநகரம் என்று இன்றைக்கு அழைக்கப்படும் மாநிலம் குஜராத். அங்கு போதை சாம்ராஜ்யத்தை உருவாக்கியதில் 5 முறை முதல்வராக இருந்த மோடிக்கு நிச்சயம் பங்களிப்பு உண்டு. அங்கிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

இந்த உண்மையை மறைத்துவிட்டு பொய்யை மட்டும் பேசும் ஒருவரை பிரதமராகப் பெற்றதற்கு நாடே வெட்கப்படுகிறது. மக்கள் திட்டங்களில் கொள்ளை அடிக்க விடமாட்டேன் என்று யோக்கியர் போல் பேசுகிறார் மோடி. ஊழல்வாதிகள் என்று அவரால் அழைக்கப்பட்ட அனைவரையும் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு பா.ஜ.க.வில் சேர்த்து எப்படி? இப்போது அவர்கள் புனிதர்கள் ஆகிவிட்டார்களா?. இந்தியா கூட்டணி வெல்வது உறுதி. ரபேல் விமான பேர ஊழல் முதல் நீங்கள் செய்த அனைத்து ஊழல்களும் அம்பலத்துக்கு வரும். உங்கள் தலைமையில் இந்தியாவில் சுரண்டிய வளங்களை எல்லாம் மீட்டு மீண்டும் நாட்டுக்கே ஒப்படைப்போம். இதனை காங்கிரஸ்- தி.மு.க பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி செய்து காட்டும்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றாலே பிரதமர் மோடிக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்கிறது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: