பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகையை யொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை செயலாளர் தர்மேந்திர பிரதான் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (2024-25ம் நிதியாண்டு) வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட கொள்கை அளவிலான ஆணை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான வேட்டி, சேலைகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்க ஏதுவாகவும், முழுவதுமாக விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியினை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணை வழங்கப்படுகிறது.

2024-25ம் நிதி ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நூல் கொள்முதல், கூலி முன்பணம் மற்றும் இத்திட்டம் தொடர்பான இதர செலவினங்களை மேற்கொள்ளவும், அதற்குரிய தொகைகளை ஒப்பளிப்பு செய்யும் அதிகாரத்தை கைத்தறி இயக்குநருக்கு வழங்கி ஆணையிடப்படுகிறது. பொங்கலையொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான மாவட்ட வாரியாக தேவைப்படும் வேட்டி, சேலைகளின் எண்ணிக்கையினை கைத்தறி இயக்குநருக்கு தெரிவிக்கும்படி வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் பண்டிகையின்போது, நியாயவிலை கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: