பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதம்

*விவசாயிகள் கவலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் சாரலுடன் நின்று போகும் பருவமழையால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர்சாகுபடிக்கு கன மழை பெய்ய எதிர்பார்த்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், விவசாயம் நிறைந்த பகுதியான பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழையும். நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையும், மே மாதத்தில் கோடை மழையும் இருக்கும். அந்நேரத்தில், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது தேவையான பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

இதில், கடந்த 2023ம் ஆண்டில் ஜூலை முதல் வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. அதன்பின், வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால், விவசாய நிலங்களில் பல்வேறு காய்கறி மற்றும் மானாவாரி வாரி சாகுபடி அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டது. மேலும், மண்ணில் ஈரப்பதம் தொடர்ந்திருந்ததால், தென்னைகளின் வளர்ச்சி அதிகமானது.

ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல மாதமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்திருந்தது. கடந்த மே மாதத்தில் இரண்டு வாரம் மட்டுமே கோடை மழை பெய்ததால், அதன்பின் விவசாயிகள், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்தனர். இந்த, மாதம் துவக்கத்தில் இருந்த தென்மேற்கு பருவமழை பெய்யும் என விவசாயிகள் என்னியிருந்தனர்.

ஆனால், கடந்த சில வாரமாக பருவமழை பொழிவின்றி பெரும்பாலான நாட்களில் வெயிலின் தாக்கமே இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை பெய்ய துவங்கியது. இந்த, மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை என கூறப்படுகிறது. அதுபோல், சமவெளிப்பகுதியான பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் அவ்வப்போது சிறிது நேரமே சாரல் மழை பெய்துள்ளது.

இந்த, மழை வலுக்காமலும், எதிர்பார்த்த அளவிற்கு மழையின்றியும் போனது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்ய துவங்கி, சில நாட்களில் கன மழையாக தொடர்ந்து வலுக்கும். ஆனால், நடப்பாண்டில் இந்த மாதத்தில் சுமார் முன்று வாரங்கள் கடந்தும் தென்மேற்கு பருவமழை பெய்யாதது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல இடங்களில் கோடை மழைக்கு பிறகு சில வாரத்திற்கு முன்பே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது தயார்படுத்தி வைத்தனர். ஆனால், மழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் அந்த நிலத்தில் பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை விரைந்து மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். வரும் நாட்களிலாவது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தால், காய்கறி மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: