தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த புட்செல் போலீசார் நடவடிக்கை

*2 மாதத்தில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார் (புட்செல்) ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் கூடுதலாக செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் முக்கிய ரோடுகளில் ரோந்து பணி, வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுகளாக புட்செல் போலீசார் பல்வேறு கட்டமாக வாகன சோதனை மேற்கொண்டு, 2 சக்கர வாகனம், கார், டெம்போ, லாரி உள்ளிட்டவைகள் மூலமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கிராமப்புற சாலைகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார் வந்தது.பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை முழுமையாக கட்டுப்படுத்த, புட்செல் போலீசார் தனி குழு அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் வண்ணிய பெருமாள் உத்தரவின்பேரில் கேரள எல்லைப்பகுதியான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம், கோவை அருகே வேலந்தாவளம், வாளையர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இப்படி கடந்த 2 மாதமாக கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் புட்செல் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலும் பல வழிகளில் கடத்தப்பட்ட சுமார் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 24 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து புட்செல் போலீசார் கூறியதாவது: ரேஷன் அரிசிகளை பதுக்குவோர், அவற்றை கடத்துவோர் குறித்து ரகசியமாக கண்காணித்து முக்கிய வழித்தடங்கள் மற்றும் கிராம சாலைகள் என பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகன சோதனை செய்து வருகிறோம்.

இதில் ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்டவர்களே தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவது தெரிகிறது. இருப்பினும், 2 சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவோரை கையும் களவுமாக பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தொடர்ந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த புட்செல் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: