போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சியா?.. ஆக.23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆக. 23-ம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ரஷ்யா 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க கடந்த 8,9 ஆகிய தேதிகளில் ரஷ்யா சென்றார். கடந்த மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ரஷ்யா போர் தொடங்கியதற்கு பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார். முதலில் வரும் 21ம் தேதி போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு 23ம் தேதி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் 23ம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் செல்கிறார்.

பிரதமரின் உக்ரைன் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும். உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான உயர்மட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தப் பயணம் ஏதுவாக இருக்கும். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எந்தவிதமான உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சியா?.. ஆக.23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: