பிளேஆஃப் சுற்று கனவில் தொடர முனைப்பு: பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்

தர்மசாலா:16வது ஐ.பி.எல். டி20 தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெறும் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பஞ்சாப் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் எடுத்து 8வது இடத்தில் இருக்கிறது.

முந்தைய போட்டியில் டெல்லியிடம் தோற்றதன் மூலம் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

இதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி கடந்த லீக் போட்டியில் பெங்களூருவிடம் 59 ரன்னில் சுருண்டது.

இந்த தோல்விதான் ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று முன்னேற்றத்திற்கு பாதகமாக அமைந்தது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வென்றாலும், அடுத்த அணிகளின் முடிவுகள் அனுகூலமாக அமைந்தால்தான் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க இயலும்.

அதேநேரத்தில் ராஜஸ்தான் ரன்ரேட் பஞ்சாப்பை விட நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரு அணிகளும் அடுத்த சுற்று கனவில் தொடர தங்களது முழு பலத்தை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 14ல் ராஜஸ்தானும், 11ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று உள்ளன.

The post பிளேஆஃப் சுற்று கனவில் தொடர முனைப்பு: பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: