பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழா ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் ஆடித் திருவிழாவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரியபாளையத்தில் மக்களிடையே புகழ்பெற்று விளங்கும்  பவானியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 17ம் தேதி ஆடித் திருவிழா துவங்குகிறது. இவ்விழா 14 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு தங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்தபடி கோயிலை வலம்வந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து நேற்று மாலை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான சுகபுத்ரா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், துணை தலைவர் சுரேஷ், பிடிஓக்கள் நடராஜ், சத்தியமூர்த்தி, பெரியபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், பெரியபாளையம் பவானியம்மன் கோயிலை சுற்றிலும் கூடுதலாக சிசிடிவி கண்காணிப்பு காமிரா பொருத்துதல், வார விடுமுறை நாட்களில் சுகாதார பணிகளில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடவும், வாரத்தில் 4 நாட்களுக்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

மேலும், ஆடித்திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பஸ் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், 14 வாரத்துக்கும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி தலைமையில் 150 போலீசார், 50 ஊர்காவல் படையினர் என மொத்தம் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தீர்மானிக்கப்பட்டது. இதில் போக்குவரத்து, சுகாதாரம், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, மருத்துவம் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் குணசேகரன், சீனிவாசன், ரவி, குழந்தைவேலு, சரவணன், அப்புன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழா ஏற்பாடு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: