சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத ரூ.1,957 கோடியில் 10,727 கோயில் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டமன்ற அறிவிப்புகளின்படி ரூ.3,814 கோடி மதிப்பீட்டில் 9,521 கோயில் பணிகளும், சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத 10,727 கோயில் பணிகள் ரூ. 1,957 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் பந்தக்கால் நட்டு, குடமுழுக்கு விழா பணிகளை தொடங்கி வைத்து, அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் ரதத்திற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் 1,740 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,000 கோடி மதிப்பிலான 6,308 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 1,66,348 ஏக்கர் கோயில் நிலங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற அறிவிப்புகளின்படி ரூ. 3,814 கோடி மதிப்பீட்டில் 9,521 பணிகளும், சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத 10,727 பணிகள் ரூ.1,957 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.

திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலுக்கு கடந்த 1958ம் ஆண்டு குடமுழுக்கு நடந்திருக்கிறது. கோயில் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் இந்த அரசு பொறுப்பேற்றபின், சட்டப்படி தீர்வு காணப்பட்டுள்ளன. குடமுழுக்கு நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் ஆன இந்த கோயிலுக்கு ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு ரதம் ஒன்று ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்படுகிறது. அதேபோல இந்த அரசு பொறுப்பேற்ற பின், பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் நடைபெற்ற மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவோடு மறுபதிப்பு செய்யப்பட்ட “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூல் வெளியிடப்பட்டது.

400 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதேபோல ஓடாமல் இருந்த பல்வேறு தேர்களை ஓட்டியதும், பராமரிக்கப்படாத குளங்களை புனரமைத்ததும் இந்த ஆட்சியில்தான் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திருமலைமுத்து, இணை ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் சக்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத ரூ.1,957 கோடியில் 10,727 கோயில் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: