நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சென்னையில் 38 விமான சேவைகள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 5 சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகள் தாமதமாகியது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேல் மழை அதிகரிக்க தொடங்கியது. மேலும், இடி, மின்னலுடன் சூறைக்காற்றும் பலமாக வீசியது. தொடர்ந்து பெய்து கொன்டிருந்த மழையால் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரையில், விமான சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.

சென்னையில் தரையிறங்க வந்த தூத்துக்குடி, திருச்சி, கோவை, மதுரை, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மற்றும் சர்வதேச விமானமான டாக்கா ஆகிய 18 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. அதன் பின்பு அவ்வப்போது மழையும், சூறைக்காற்றும் சிறிது ஓய்ந்தபின் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, மதுரை மற்றும் பக்ரைன், குவைத், கோலாலம்பூர், பாரீஸ் செல்லும் சர்வதேச விமானங்கள் உட்பட 20 விமானங்கள், ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 18 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 38 விமானங்கள் தாமதம் ஆகியது. மேலும் இந்த விமானங்கள் தாமதம் பற்றி, சென்னை விமான நிலையத்தில் முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை. இதனால் விமானப் பயணிகளும், பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

The post நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சென்னையில் 38 விமான சேவைகள் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: