நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி டெல்லி போலீஸ் மனு

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த 13ம் தேதி விதிகளை மீறி மக்களவையில் 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு குறித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள மனோரஞ்சன், சகார் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் தேவி, மகேஷ் குமாவத் மற்றும் முக்கிய குற்றவாளியான லலித் ஜா ஆகியோரின் நீதிமன்ற காவல் கடந்த வியாழக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரின் காவலும் வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய அனைவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க கோரி டெல்லி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மனோரஞ்சன், சாகர் சர்மாவை விசாரணை தொடர்பாக, டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

* அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே கலர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நீலம் தேவி தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீஸ் காவலில் இருப்பதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சார் கிருஷ்ணா, ஷாலிந்தர் கவுர், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்ததுடன், வரும் ஜனவரி 3ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.

The post நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி டெல்லி போலீஸ் மனு appeared first on Dinakaran.

Related Stories: