ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் கடைசி கூட்டத்தொடராக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், மரபுப்படி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைப்பார். இதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் 2 வாலிபர்கள், மக்களவையில் எம்பிக்கள் பகுதிக்குள் குதித்து பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் பதாகைகள் ஏந்தி வந்தனர். இதனால் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்களவையில் 100 எம்பிக்களும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இந்த பிரச்னையோடு, நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டு வருவதால் அதை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கும் என்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஆதரவு கோரி ஒன்றிய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரசின் கே.சுரேஷ், திமுகவின் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாய், சிவசேனாவின் ராகுல் ஷெவாலே, சமாஜ்வாடியின் எஸ்.டி.ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே சார்பாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, ‘‘அசாமில் ராகுலின் நீதி யாத்திரை மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசே யாத்திரையை தடுக்க முயற்சித்தது. மேலும் நாட்டில் சர்வாதிகாரம் அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இப்பிரச்னைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சுமூகமாக நடந்தது. கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.

* சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘குளிர்கால கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் 132 பேர் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 14 பேரின் அத்துமீறல்கள் மிகவும் தீவிரமானதாக கருதி சிறப்புரிமை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இந்த 14 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவும் திரும்ப பெறப்படும். இதுதொடர்பாக அரசு சார்பில் சபாநாயகர் மற்றும் அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்’’ என்றார்.

The post ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: