பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும்.

சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 3,331.25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி உரிமையாளர் எவ்வளவு நிலம் வைத்துள்ளார் என்பதை கணக்கீடு செய்து , அவர் எந்த பகுதிகளுக்குள் வருகிறார், அந்த பகுதியில் ஒரு ஏக்கருக்கு விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான இழப்பீடு கணக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உறுதி செய்யப்பட்டதுடன் அந்த தொகையை உடனடியாக அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

The post பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: