‘2 பேரை எரித்து கொன்றிருக்கேன்… கொலை எனக்கு புதுசு இல்ல’ சொந்த கட்சியின் கவுன்சிலரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ: போலீசில் பரபரப்பு புகார்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்ட 3வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலர் கணேசன். இவர் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு அளித்த புகார் வருமாறு: நான் எனது சகோதரருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறேன். திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார். இவர் எனது வார்டு பணிகளுக்கு கடந்த 2 வருடங்களாக நிதி ஒதுக்கவில்லை. எனவே மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், எனது வார்டுக்கு நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டு வந்தேன். இதனால் மாவட்ட சேர்மன் வசந்தியும் அவரது கணவர் மான்ராஜ் எம்எல்ஏவும் கட்சி கூட்டங்களில் நான் கலந்து கொள்ள செல்லும்போதெல்லாம் மிரட்டி வந்தனர்.

இந்நிலையில் இன்று(நேற்று) எனது செல்போனில் அழைத்த மான்ராஜ் எம்எல்ஏ, ‘‘வரும் 28, 29ம் தேதியில் நடக்கும் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், வார்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. பணம் ஒதுக்குங்கள் என்று பேசினால் கூட்டத்தில் வைத்தே உன்னை கொன்று புதைத்து விடுவேன். ஏற்கனவே கேரளாக்காரர்கள் இரண்டு பேரை எரித்து கொன்றது போல் உன்னையும் எரித்து கொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. கொலை செய்வது எனக்கு புதிதல்ல. உன்னை கொன்றாலும் கேட்பதற்கு நாதியில்லை. பதவியில் இருப்பதால் எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று மிரட்டி உள்ளார்.

இதற்கு நான், ‘‘உங்க மனைவிதானே மாவட்ட சேர்மன். நீங்கள் எதுக்கு பேசுறீங்க’’ என்று கேட்டேன். அதற்கு மான்ராஜ் எம்எல்ஏ, என்னை ஆபாசமாக பேசி, ‘‘பொண்டாட்டிக்காக நான் பேசாம வேற எவன்டா பேசுவான். அனாதைப் பயலே. உனக்கு செல்வம் அடைக்கலம் கொடுக்கிறதால தான் நீ வீட்டில் குடியிருக்க. செல்வத்த ரெண்டு சாத்து சாத்தினா உன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவான். அப்புறம் நீ ரோட்டுல அனாதைய அடிபட்டு சாவ’’ என்று கொலைமிரட்டல் விடுத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மான்ராஜூம் அவரது மனைவியும் என்னை மிரட்டி வருவதால் பயத்தில் இதயநோய் வந்து ஆஞ்சியோ செய்துள்ளேன்.

இந்நிலையில் இன்றும் மான்ராஜ் என்னை மிரட்டியதால் உயிர் பயம் ஏற்பட்டிருக்கிறது. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோரால் எனது உயிருக்கும் உடமைக்கும் எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனக்கோ, எனது சகோதரர் செல்வத்திற்கோ, அவரது குடும்பத்திற்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மான்ராஜூம் அவரது மனைவியும் தான் முழு பொறுப்பு. எனவே மான்ராஜ் எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோரை அழைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கும் உடமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏ மீதும் அவரது மனைவியான மாவட்ட சேர்மன் மீதும் அதிமுக மாவட்ட கவுன்சிலர் புகார் அளித்துள்ள சம்பவம் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘2 பேரை எரித்து கொன்றிருக்கேன்… கொலை எனக்கு புதுசு இல்ல’ சொந்த கட்சியின் கவுன்சிலரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ: போலீசில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: