எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை: எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். பேரவையில் நேற்று காலையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முயன்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, இன்றைக்கு நிறைய குழுக்களின் அறிக்கை அளிக்க வேண்டி உள்ளது. தனி தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. நாளை பேசுங்கள். நாளை உங்கள் கோரிக்கையை எடுத்து கொள்கிறேன் என்றார். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, இன்று (நேற்று) ஒரு அரசினர் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்றார்.

இதை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நேரம், ஏதாவது பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணை தலைவர் தான் பேசுவார். எங்களுடைய கட்சி சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு கவனம் செலுத்தவில்லை என்றார்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சி தலைவர் மற்றும் முன் வரிசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. உங்கள் கோரிக்கையை நாளை எடுத்துக்கொள்கிறேன் என்றுதான் கூறுகிறேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் என்பது காலங்காலமாக உள்ள மரபு. அதை வழங்க வேண்டும் என்றுதான் கோருகிறோம் என்றார்.அதற்கு சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சி தலைவருக்குத்தான் அவையில் இருக்கை உள்ளது. எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை என்பது இல்லை. உங்களுக்கு நாளை வாய்ப்பு தருகிறேன் என்றார். இதையடுத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

The post எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: