அடிப்படை விஷயம் கூட தெரியாத அரைவேக்காடு அண்ணாமலை அரசியல்வாதி அல்ல; ‘அரசியல் வியாதி’: மாஜி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பாஜ தலைவரான அண்ணாமலை எதற்கும் லாயக்கில்லாதவர். பக்குவம் இல்லாதவர். ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினர் என அத்தனை பேரும் ஒரு மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவில் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியவர். ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில், ஒரு இழிவான செயலை செய்து வருகிறார்.

அண்ணாமலை ஒரு அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாதி. மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த தமிழிசையும் தவறான தகவலை கூறுகிறார். கர சேவைக்கு ஆள்களை அனுப்ப ஜெயலலிதா சொன்னார் என்பதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். ராமர் கோயில் கட்ட வேண்டும், மசூதியும் இருக்க வேண்டும் என்றுதான் ஜெயலலிதா விரும்பினார். தோல்வியின் உச்சகட்டத்தை நோக்கி பாஜ சென்று கொண்டிருக்கிறது. மேல் இருப்பவர்களும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள், கீழ் இருப்பவர்களும் அப்படித்தான் பேசுகிறார்கள். அதிமுகவினரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு தெய்வ பக்தி இருந்தது. ஆனால் மத பிரிவினை கிடையாது. அடிப்படை விஷயம் கூட தெரியாத ஒரு அரைவேக்காடுதான் அண்ணாமலை. உழைத்து சம்பாதிக்காத, ஊழலின் உருவமாக இருக்கும் இவர்களுடன் அதிமுகவினர் விவாதம் செய்ய வேண்டுமாம். மத்தியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை. அந்த கட்சியை சவலை குழந்தையாக பார்க்கிறோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

The post அடிப்படை விஷயம் கூட தெரியாத அரைவேக்காடு அண்ணாமலை அரசியல்வாதி அல்ல; ‘அரசியல் வியாதி’: மாஜி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: