‘ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0’ கஞ்சா பதுக்குபவர், விற்பவர் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சென்னை: கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கஞ்சா வேட்டை 1.0 கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. அதையடுத்து கஞ்சா வேட்டை 2.0 கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரையும், கஞ்சா வேட்டை 3.0 கடந்த 2022 டிசம்பர் 12ம் தேதி முதல் 31ம் தேதி வரையும் நடந்தது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இத்தொழிலில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் கடந்த 30ம் தேதி இரவு முதல் நடந்த வருகிறது. இந்த நடவடிக்கையில் நேற்று அதிகாலை தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட குன்றத்தூரில் வாகன சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 22 டன் குட்கா கைப்பற்றப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வேன்கள் மற்றும் 4 டாடா ஏசி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ‘ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0’ கஞ்சா பதுக்குபவர், விற்பவர் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: