ஊட்டியில் மலர் கண்காட்சி தேதி மாற்றம்: மே 15 துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது

ஊட்டி: ஊட்டியில் மலர் கண்காட்சி முன்னதாகவே துவங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.

இம்முறை புதிதாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடக்கிறது. இதில், மலர் கண்காட்சியே முக்கிய விழாவாக கருதப்படுகிறது. இம்முறை மலர் கண்காட்சி வரும் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இ-பாஸ் நடைமுறையால் ஒரே சமயத்தில் வர முடியாத நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக இம்முறை 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இம்மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை 11 நாட்கள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது. இதற்காக, தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தற்போது தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘தற்போது, ஊட்டி வருவதற்கு இ-பாஸ் நடைமுறை உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஒரே சமயத்தில் வர முடியாத நிலை உள்ளது.

எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக முன்னதாகவே மலர் கண்காட்சி துவக்கப்படவுள்ளது. அதன்படி, மே 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலில் மற்றும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக மலர் கண்காட்சியை கண்டு ரசித்து செல்ல முடியும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கல்லார், குஞ்சப்பணை, மேல் கூடலூர், மசினகுடி மற்றும் கெத்தை ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் கடைபிடிக்கப்பட்டு வருவதால், மாவட்டத்திற்குள் வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும்.

சோதனை சாவடிகளில் உள்ள இ-பாஸ் சோதனை செய்யும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மாவட்ட எல்லைகளிலும், சோதனை சாவடிகளிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய 12 மீட்டர் நீளமுள்ள சுற்றுலா பஸ்களுக்கு தடை
கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவு படி 12 மீட்டர் மற்றும் அதற்கு மேல் (சேசிஸ்) நீளமுள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (சுற்றுலா பஸ்கள்) நீலகிரி மாவட்டத்திற்கு வர வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 12 மீட்டர் நீளமுள்ள பெரிய பஸ்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.

 

The post ஊட்டியில் மலர் கண்காட்சி தேதி மாற்றம்: மே 15 துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: