சான்று பெற்ற தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

 

சத்தியமங்கலம், மே 18: ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும். விற்பனை நிலையத்தின் முகப்பில் உள்ள விலை விவரப்பட்டியலில் விதைகளின் விலையை தவறாமல் ஒவ்வொரு நாளும் அன்றைய தேதியிட்டு தெளிவாக தெரியும்படி பதிவுசெய்ய வேண்டும். விதைகளை அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச்சான்று பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.மேலும், கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது விதை விற்பனை தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை, கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்றிதழ், விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post சான்று பெற்ற தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: