வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை வரும் மார்ச் 31ம் தேதி நீடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சக அதிகாரி அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. உள்நாட்டுச் சந்தையில் வெங்காயம் கிடைப்பதை உறுதிசெய்யவும், வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், வெங்காய ஏற்றுமதிக்கான தடை வரும் மார்ச் 31ம் தேதி வரை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கோனில், கடந்த 17ம் தேதி 1 குவிண்டால் 1,280 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், நேற்று முன்தினம் 40.62 சதவீதம் உயர்ந்து 1,800 ரூபாயாக உயர்ந்தது.

இந்த நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படவில்லை; அது அமலில் உள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோருக்கு வெங்காயம் நியாயமான விலையில், போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என ஒன்றிய அரசின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

The post வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: