விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக மனு வீடியோ ஆதாரம், ஆவணம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

விருதுநகர்: விருதுநகர் தொகுதியின், வாக்கு எண்ணிக்கை தொடர்பான வீடியோ ஆதாரங்கள், ஆவணங்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜ சார்பில் ராதிகா, நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4ல் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது முதல் 7 சுற்றுகள் வரை விஜயபிரபாகரன் முன்னிலையிலும் 8, 9வது சுற்றுகளில் மாணிக்கம் தாகூர், 10, 11வது சுற்றுகளில் விஜயபிரபாகரன், 12வது சுற்று முதல் மாணிக்கம்தாகூர் தொடர்ந்து முன்னணி வகித்தனர்.

இருவருக்கும் இடையே ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்கு வித்தியாசம் தொடர்ந்தது. மின்னணு வாக்கு இயந்திர எண்ணிக்கை இரவு 8.15 மணிக்கு நிறைவுற்றபோது மாணிக்கம் தாகூர் 4,639 வாக்குகள் முன்னணியில் இருந்தார். அதைத்தொடர்ந்து தபால் ஓட்டுகள் மறுநாள் அதிகாலை 1 மணியளவில் எண்ணி முடிக்கப்பட்டபோது மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன், தேர்தல் பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா ஆகியோரிடம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் விரிவான தகவல்கள், ஆதாரங்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வீடியோ ஆதாரங்கள், தகவல்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக மனு வீடியோ ஆதாரம், ஆவணம் கேட்கிறது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: