முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இன்று ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ உயர்மட்டக் குழுக் கூட்டம்: கட்சிகளின் கருத்து குறித்து ஆலோசனை


புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ உயர்மட்டக் குழுவின் கூட்டம் இன்று கூடுகிறது. அப்போது அரசியல் கட்சிகளின் கருத்து குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கிறது. மேற்கண்ட குழு அமைக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடு முழுவதும் 6 தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள், 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு, ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஒன்றிய சட்ட ஆணையத்தின் கருத்தையும் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை உயர்மட்டக் குழு கூட்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 83, 172, 356 ஆகிய பிரிவுகளின் விதிகளைத் திருத்தாமல் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது. அதனால் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள், கருத்துகள், பரிந்துரைகள் கோரப்படுகின்றன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இன்று ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ உயர்மட்டக் குழுக் கூட்டம்: கட்சிகளின் கருத்து குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: