பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் புதிய வாகனங்களுக்கு 3% வரை தள்ளுபடி: உற்பத்தியாளர்கள் ஒப்புதல்

புதுடெல்லி: பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு புதிய வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வாகன ஸ்கிராப் கொள்கையை ஒன்றிய அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்படி, பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து புதிய வாகனம் வாங்குவோருக்கு வாகன உற்பத்தியாளர்கள் 5 சதவீதம் வரை தள்ளுபடி தர வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முன்வரவில்லை.
இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் இந்திய வாகன உற்பத்தியாளர் சங்க (சியாம்) தலைவர் வினோத் அகர்வால் மற்றும் வாகன உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், அரசின் பரிந்துரையை ஏற்று, ஸ்கிராப் திட்டத்தில் புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான சான்றிதழை சமர்ப்பித்து ஷோரூம் விலையில் 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த தள்ளுபடி வணிக வாகனங்களுக்கு 2 ஆண்டும், பயணிகள் வாகனங்களுக்கு ஓராண்டும் அமலில் இருக்கும். கடந்த 6 மாதங்களுக்குள் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தவர்களுக்கு இந்த சலுகையை வழங்க மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா, டொயோட்டா, ஹோண்டா, கியா, ரெனால்ட், நிசான், எம்ஜி, போக்ஸ் வேகன் நிறுவனங்கள் 1.5 சதவீதம் அல்லது ரூ.20,000 இதில் எது குறைவோ அதனை தள்ளுபடியாக வழங்க உள்ளன. இதுபோல், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு 3 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதேநேரத்தில், இந்த திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஜிஎஸ்டியை குறைப்பது, புதிய வாகனங்களை மக்கள் வாங்க ஊக்குவிப்பதாக அமையும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் புதிய வாகனங்களுக்கு 3% வரை தள்ளுபடி: உற்பத்தியாளர்கள் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: