பெங்களூரு: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது ஒரு கற்பழிப்பு வழக்கு உட்பட 2 வழக்குகள் பதியப்பட்டு, அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், விதான சவுதா வளாகத்தில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் வைத்தே தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதி பாஜ எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னா, பிபிஎம்பி ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு மிரட்டியதுடன், அவரை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த முனிரத்னா, சமூக சேவகி பெண் ஒருவர் அளித்த பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முனிரத்னா மீது மற்றுமொரு கற்பழிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதான சவுதாவில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அரசு அவருக்கு வழங்கிய காரில் வைத்தும் பலாத்காரம் செய்ததாகவும் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரிலும், முனிரத்னா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனக்கு வீடியோ கால் செய்ததாகவும் அந்த பெண் புகாரில் கூறியிருப்பதால் சைபர் கிரைம் போலீசார் அதை ஆய்வு செய்துவருகின்றனர். முனிரத்னா மீதான அனைத்து வழக்குகளையும் எஸ்.ஐ.டி விசாரிக்கும் என்பதால் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும்.
The post கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை பலாத்காரம் செய்தார்: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது மேலும் ஒரு பெண் புகார் appeared first on Dinakaran.