நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் பாரில் தோழிகளுடன் நடனமாடிய மாணவன் சுருண்டு விழுந்து பலி: போலீசார் விசாரணை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலின் பாரில் தனது தோழிகளுடன் மது போதையில் இசைக்கு ஏற்றப்படி குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவன், சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர், ராமாபுரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கி, படித்து வந்தார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதனால், வார இறுதி நாட்களில் தன்னுடன் படிக்கும் தோழிகளுடன், நட்சத்திர ஓட்டலில் உள்ள பார்களுக்கு செல்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முகமது சுகைல், தனது தோழிகளான சண்முகப்பிரியா, தேவகி, அரிதா ஆகியோருடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அங்கு, தனது தோழிகளுடன் மது போதையில், இசைக்கு ஏற்றப்படி நடனமாடியும், கூத்தாட்டம் போட்டபோது திடீரென முகமது சுகைல் சுருண்டு விழுந்துள்ளார்.

இதை பார்த்த அவரது தோழிகள் அலறினர். உடனே, பார் ஊழியர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், முகமது சுகைல் வரும் வழியிலேயே இறந்தது தெரிந்தது. தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முகமது சுகைல் உடன் வந்த தோழிகள் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, நீண்ட நேரம் நடனமாடியதால் அவருக்கு மாரடைப்பு எற்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் முகமது சுகைல் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல தனியார் பல்கலைக்கழக மாணவன், சக தோழிகளுடன் பாரில் நடனமாடும் போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் பாரில் தோழிகளுடன் நடனமாடிய மாணவன் சுருண்டு விழுந்து பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: