செய்யூர்: மணப்பாக்கம் பகுதியில் ஆபத்தானநிலையில் காணப்படும் டிரான்ஸ்பார்மரை மாற்றி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் இருந்து தொழுப்பேடு செல்லும் வழியில் மணப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலையோரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.தற்போது, டிரான்ஸ்பார்மர் பழுதாகி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இது, எப்போதும் வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலை உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து, புகார் மனு அளித்தும் மின்வாரிய அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, உயிரிழப்பு போன்ற பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றியமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
