நாகப்பட்டினம் : புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் பல தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை ஒழுங்குபடுத்துவதற்காக நாகூர் தர்காவிற்கு இடைக்கால நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 5 ஆண்டு காலம் நாகூர் தர்காவை நிர்வாகித்த இடைக்கால நிர்வாகிகள் எந்த ஒரு சொத்தினையும் மீட்கவில்லை.
இதனால் கடந்த 2022ம் ஆண்டு இடைக்கால நிர்வாகிகளை நீக்கம் செய்து விட்டு பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிஸ் வசம் தர்கா நிர்வாகத்தை நீதிமன்றம் ஒப்படைத்தது. பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிஸ் செய்யதுகாமில்சாகிப்பை தலைமை அறங்காவலாரக தேர்வு செய்து நிர்வாகம் செய்ய தொடங்கினர். நிர்வாகிகள் நாகூர் தர்கா சொத்துக்களை கண்டறியும் பணியில் இறங்கினார்கள். அதன்படி திருவாருர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம் என பல இடங்களில் 8 லட்சம் சதுர அடி தர்கா நிலம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. இது வருடாந்திர குத்தகைக்கு விடப்பட்டு நாகூர் தர்காவின் வருவாய் பெருக்கப்பட்டது.
இந்நிலையில் நாகூர் கால்மாட்டு தெரு, பீரோடும் தெரு சந்திப்பில் பழங்கால கல் மண்டபம் உள்ளது. நாகூர் ஆண்டவரை தரிசனம் செய்ய கட்டிகொடுக்கபட்டதாக கூறப்பட்டது. நாகூர் தர்கா நிர்வாகம் இந்த கல் மண்டபத்தை தர்கா சொத்து என தெரியவந்தது. அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. மனுவின் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ் வருவாய்த்துறையினருக்கு உத்தவிட்டார். இதனிடையே நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி செய்யது காமில்சாகிப் தர்காவிற்கு சொந்தமான கல்மண்டபத்தின் சொத்தை பட்டா பெயர் மாற்றி தர வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நான்கு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. உடனே கலெக்டர் அருண்தம்புராஜ் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டா மாற்ற ஆணை பிறப்பித்தார். நாகூர் தர்கா கல்மண்டபம் நாகூர் தர்கா சொத்து என பட்டா வழங்கப்பட்டது.
இந்த கல் மண்டப இன்றைய சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தர்கா அலுவலர்கள், தர்கா பொறியாளர் கல்மண்டபத்தை பார்வையிட்டு நில அளவினை உறுதி செய்தனர்.
இந்த கல் மண்டபத்தினை நாகூர் தர்கா சொத்து என அரசு கெஜட்டில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகூர் தர்கா நலனுக்காக விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என தர்கா மானேஜிங் டிரஸ்டி செய்யதுகாமில்சாகிப் கூறினார்.
